கல்முனை மாநகரில் மாற்றம் இல்லை என மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் தெரிவித்தாலும், கல்முனை மாநகரசபையை நான்கு உள்ளூராட்சி மன்றங்களாகப் பிரிக்கும் எமது கோரிக்கையை நாம் கைவிடப் போவதில்லை. எமது நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கிறோம். எமதுபோராட்டங்களைத் தொடர்ந்து முன்னெடுப்போம் என விளையாட்டுத்துறை பிரதியமைச்சரும், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பிரதித் தலைவருமான எச்.எம். எம்.ஹரீஸ் தெரிவித்தார்.
எமது மக்கள் ஆத்திர மேலீட்டினாலே சாந்தமருதுவில் எங்கள் கொடும்பாவிகளை எரித்தார்கள். இதனை நாம் நிரந்தர பகையாகப் பார்க்கவில்லை. கல்முனை மாநகரசபை பிரதேசம் நான்கு பிரிவுகளாக பிரிக்கப்பட்டதும் நிச்சயம் அவர்கள் எமக்கு ஆதரவு வழங்குவார்கள். இதனைப் பெற்றுக்கொள்வதற்கு நாம் திடசங்கற்பம் பூண்டுள்ளோம் எனவும் அவர் தெரிவித்தார்.
சாய்ந்தமருதுவில் இடம்பெற்ற மக்களின் போராட்டம் மற்றும் கல்முனை மாநகரசபையை நான்கு பிரதேச சபைகளாக பிரிக்கக் கோரும் கோரிக்கையும் அது தொடர்பான ஆர்ப்பாட்டங்கள் பற்றி வினவிய போதே பிரதியமைச்சர் ஹரீஸ் ‘விடிவெள்ளி’ க்கு இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில், கடந்த 23,24 ஆம் திகதிகளில் அலரி மாளிகையில் பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது கல்முனை மாநகர சபையை நான்கு பிரதேச சபைகளாக பிரிக்குமாறு பிரதமர் அமைச்சர் பைசர் முஸ்தபாவுக்கு உத்தரவிட்டார். இந்தப் பேச்சுவார்த்தையில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும், அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிசாத் பதியூதீன், மாகாணசபைகள் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா உட்பட நானும் கலந்து கொண்டிருந்தேன்.
ஏற்கனவே அடுத்த வருடம் மார்ச் மாதம் நடைபெற திட்டமிடப்பட்டிருந்த உள்ளூராட்சி மன்ற தேர்தல் தவிர்க்க முடியாத காரணங்களினால் எதிர்வரும் ஜனவரி மாதத்துக்கு முன்னிலைப்படுத்தப்பட்டதனாலே கல்முனை விவகாரம் இந்த நிலைமைக்குள்ளானது, தடைப்பட்டது. என்றாலும் கல்முனை மாநகர சபை பிரதேசத்தை நான்காகப் பிரிப்பதற்கான அங்கீகாரத்தை பிரதமர் வழங்கியுள்ளார்.
கடந்த 19 ஆம் திகதி கல்முனை மற்றும் சாய்ந்தமருது பள்ளிவாசல்களின் பிரதிநிதிகள் கலந்துகொண்ட கூட்டத்திலும் கல்முனை மாநகரசபை பிரதேசம் நான்காகப் பிரிக்கப்பட வேண்டுமென இணக்கம் காணப்பட்டுள்ளது.
மக்கள் எம்மீது கொண்ட ஆத்திரத்தினால் எமது கொடும்பாவிகளை எரித்தார்கள் என்பதற்காக எமது கோரிக்கையை கைவிடப்போவதில்லை. நான்கு பிரதேச சபைகளைப் பெற்றுக்கொள்ளும் வரை தொடர்ந்தும் முன்னெடுப்புகளை மேற்கொள்வோம் என்றார்.
அமைச்சர் பைசர் மறுப்பு
கடந்த மாதம் அலரி மாளிகையில் நடைபெற்ற கூட்டத்தில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க கல்முனை மாநகர சபையை நான்கு பிரதேச சபைகளாக பிரிக்குமாறு என்னிடம் கூறவில்லை. பிரிக்க வேண்டாம் என்றும் கூறவில்லை. அப்பகுதி அரசியல் கட்சிகள் மற்றும் மக்களின் ஆலோசனைகளை இது தொடர்பில் பெற்றுக் கொள்ளுமாறே பிரதமர் என்னிடம் கூறினார்என நேற்று மாலை மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் கேட்போர் கூடத்தில் நடைபெற்ற ஊடக மாநாட்டில் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பைசர் முஸ்தபா, ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளிக்கையில் இவ்வாறு தெரிவித்தார்.
கடந்த மாதம் அலரிமாளிகையில் நடைபெற்ற கூட்டமொன்றில் கல்முனையை நான்கு பிரதேச சபைகளாக பிரிக்குமாறு பிரதமர் உங்களுக்கு உத்தரவிட்டதாக பிரதியமைச்சர் ஹரீஸ் தெரிவித்துள்ளாரே என்ற கேள்விக்குப் பதிலளிக்கையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
மேலும் அவர் பதிலளிக்கையில், “எந்தவொரு முடிவினையும் அனைவரினதும் ஆலோசனைகளைப் பெற்றே மேற்கொள்ளும்படியும் பிரதமர் என்னிடம் கூறினார். இந்த அமைச்சைப் பொறுப்பேற்றிருந்த முன்னாள் அமைச்சர்கள் போன்று நான் ஒருபோதும் செயற்படப்போவதில்லை. தனித்து எந்த முடிவினையும் மேற்கொள்வதில்லை” என்றார்.