ஸ்ரீலங்காவின் கேகாலை மாவட்டம் கலிகமுவ பிரதேசத்தில் அதி நவீன பேருந்து ஒன்று திடீரென்று தீப்பிடித்து எரிந்தமையினால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கி சென்ற பேருந்தே இவ்வாறு தீப்பிடித்து எரிந்துள்ளதாக அறியமுடிகிறது. சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
கொழும்பிலிருந்து நுவரெலியா நோக்கிச் சென்றுகொண்டிருந்த அதி நவீன பேருந்து ஒன்று கேகாலை மாவட்டத்தின் கலிகமுவ என்ற இடத்தில் சென்றுகொண்டிருந்தபோது மோட்டார் சைக்கிள் ஒன்று அதனுடன் மோதுண்டது. இதனால் பேருந்து தீப்பிடித்து எரியத்தொடங்கியுள்ளது.
தீ கொழுந்துவிட்டு எரியத்தொடங்கி அதனை அணைப்பதற்கு அங்கிருந்தோர் எவ்வளவோ முயன்றும் முடியாமற்போனதாகவும் இதனால் அந்தப் பேருந்து முற்றாகவே எரிந்து நாசமாகியுள்ளதாகவும் தெரியவருகிறது.
இந்தத் தீ விபத்துச் சம்பவத்தினால் எதுவித உயிர்ச்சேதமும் ஏற்படாதபோதும் இது குறித்த விசாரணைகளை தற்பொழுது பொலிஸார் மேற்கொண்டுவருவதாக தெரிவிக்கப்படுகிறது.