காங்கோவின் கிழக்கு நகரமான பெனியில் உள்ள சிறையில் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 11 பேர் உயிரிழந்துள்ளதாகவும், சுமார் 900 கைதிகள் தப்பியோடி இருப்பதாக சிறை அதிகாரிகள் தெரிவித்துள்ளார்.
கடந்த ஒரு மாதத்தில் மட்டும் சிறைகளின் மீது தீவிரவாதிகள் தாக்குதல் நடத்துவது இது நான்காவது முறை என அங்குள்ள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
பெனி நகரில் உள்ள சிறை தாக்குதலில் கொல்லப்பட்டவர்களில் 8 பேர் சிறை காவலர்கள், மேலும் 30க்கும் அதிகமான சிறை காவலர்கள் சிறையிலேயே இருப்பதாக வடக்கு கிவு பிராந்திய ஆளுநரான ஜூலியன் பலூகு தெரிவித்துள்ளார்.
மேலும் சிறையில் இருந்த 900 கைதிகள் இந்த கலவரத்தை பயன்படுத்தி தப்பியோடியுள்ளனர். தாக்குதலைத் தொடர்ந்து பெனி மற்றும் புடெம்போ பகுதிகளில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதைத் தொடர்ந்து ராணுவம் மற்றும் பொலிசார் மட்டுமே வெளியில் செல்லலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார். தாக்குதலை நடத்தியவர்கள் குறித்த விரிவான தகவல்கள் இன்னும் அறியப்படவில்லை.
முன்னதாக கின்ஷாசா பகுதியில் மர்ம நபர்கள் நடத்திய தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டனர் என காங்கோ பொலிசார் தெரிவித்துள்ளனர். இதே போல் மே மாதம் கிறிஸ்துவ செக்ட் உறுப்பினர்கள் நடத்திய தாக்குதலில் சிறையில் அடைக்கப்பட்டிருந்த கிறிஸ்துவ தலைவர் தப்ப வைக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.