உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தலை கலப்பு முறையில் எதிர்வரும் நவம்பர் மாதம் இறுதிவாரத்தில் நடத்துவதற்கு இணக்கம் காணப்பட்டுள்ளது. இந்தத் தேர்தலை 60 சதவீதம் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறையையும் 40சதவீதம் விகிதாசார பிரதிநிதித்துவ முறையையும் கொண்ட கலப்புமுறையில் நடத்துவதற்கு அரசியல் கட்சிகளிடையே இணக் கம் ஏற்பட்டுள்ளது. கலப்பு முறைமையில் நடத்தப்படும் இத்தேர்தலில் பெண்களுக்கு 25 சதவீதம் இட ஒதுக்கீடு வழங்குவதற்கும் ஏகமனதான அங்கீகாரம் அளிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தல் குறித்து பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தலைமையில் அரசியல் கட்சிப்பிரதிநிதிகளுக்கிடையிலான கலந்துரையாடலொன்று நேற்று அலரிமாளிகையில் நடைபெற்றது.
இக்கலந்துரையாடலில், ஐக்கிய தேசியக் கட்சி சார்பில் அக்கட்சியின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான கபீர் ஹசீம், பிரதி அமைச்சர் அஜித் பீ பெரேரா, ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சி சார்பில் அமைச்சர் நிமல் சிறிபால டி சில்வா, அமைச்சர் பைஸர் முஸ்தபா, நிதி மற்றும் ஊடகத்துறை இராஜங்க அமைச்சர் லசந்த அழகியவண்ண, மக்கள் விடுதலை முன்னணியின் சார்பில் அதன் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க எம்.பி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் அதன் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் எம்.பி, தமிழ் முற்போக்கு கூட்டணியின் தலைவரும் அமைச்சருமான மனோகணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவரும் அமைச்சருமான ரிஷாட் பதியூர்தீன், ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் செயலாளர் நாயகம் டக்ளஸ்தேவானந்தா எம்.பி தேர்தல்கள் ஆணைக்குழவின் தலைவர் மகிந்த தேசப்பிரிய, சட்ட மா அதிபர் ஜயந்த சந்திரசிறி ஜயசூரிய ஆகியோர் பங்கேற்றிருந்தனர். இதன்போதே மேற்கண்டவாறு இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது.
இச்சந்திப்பு குறித்து பிரதி அமைச்சர் அஜித் பி பெரேரா தெரிவிக்ககையில்,
பிரதமர் தலைமையில் இன்று (நேற்று) நடைபெற்ற கலந்துரையாடலில் மிகவும் முக்கியமான இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. எதிர்வரும் டிசம்பர் மாதம் கா.பொ.த சாதாரண தர பரீட்சை ஆரம்பமாவதற்கு முன்னதாக உள்ளுராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இடம்பெறவுள்ளது.
இந்நிலையில் குறிப்பாக உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் பெண்களுக்கு நூற்றுக்கு இருபத்தைந்து சதவீத ஒதுக்கீட்டை வழங்குவதற்கு கட்சிகளிடையே இணக்கப்பாடு எட்டப்பட்டுள்ளது. தேர்தல் முறைமை குறித்து கொள்கையளவிலான இணக்கப்பாடுகள் காணப்படுகின்றன. இந்நிலையில் அடுத்த சில தினங்களில் நாம் மீண்டும் கூடியாராய்ந்து இறுதி முடிவொன்றை எடுக்கவுள்ளோம் என்றார்.
இச்சந்திப்பு குறித்து கருத்து வௌியிட்ட தமிழ் முற்போக்கு முன்னணியின் தலைவரும் அமைச்சருமான மனோகணேசன்,
கடந்த தேர்தல்கள் நடைபெற்ற ஒட்டுமொத்த விகிதாசார முறைமை கைவிடப்பட்டு தேர்தல்கள் புதிய வட்டார, விகிதாசார கலப்பு முறையில் நடைபெறும். இது தொடர்பில் கடந்த மகிந்த ஆட்சியில் 2012ஆம் வருடம் நிறைவேற்றப்பட்ட உள்ளூராட்சி தேர்தல் சட்டத்தில் வட்டார, விகிதாசார தெரிவுகள் தொடர்பாக இருந்த 70க்கு 30 என்ற கணக்கு, எமது புதிய திருத்த சட்டத்தில் 60க்கு 40 ஆக மாற்றப்படும்.
அதேபோல் இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில், ஒரே கட்சியில் இரண்டு வேட்பாளர்கள் போட்டியிட முடியாது என்றும், இரண்டாம் அங்கத்தவராக வெற்றி பெறுகின்றவர், தோல்வியடைந்த கட்சிகளில் அதிக வாக்குகளை பெற்றவராக இருத்தல் வேண்டும் என்ற மோசடித்தனமான பழைய விதி மாற்றப்பட்டு, ஒரே கட்சியே இரண்டு வேட்பாளர்களை போட்டியிட செய்ய முடியும் என்ற திருத்தம், புதிய திருத்த சட்டத்தில் வரும்.
அத்துடன் இரட்டை அங்கத்தவர் வட்டாரத்தில் ஒவ்வொரு வாக்காளரும், இரண்டு வாக்குகளை அளிக்க முடியும். இவை சிறுபான்மை கட்சிகள் சார்பாக நாம் தொடர்ச்சியாக முன்னெடுத்த போராட்டத்தின் மூலம் கிடைத்த வெற்றிகளாகும் என்றார்.
அதேநேரம் இச்சந்திப்பு குறித்து கருத்து வௌியிட்ட தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஊடகப்பேச்சாளரும், பாராளுமன்ற உறுப்பினருமான எம்.ஏ.சுமந்திரன்,
உள்ளூராட்சி தேர்தல் குறித்தொரு கலந்துரையாடல் இடம்பெற்றது. ஏற்கனவே 60சதவீதம் தொகுதிவாரி பிரதிநிதித்துவ முறைமையும், 40சதவீதம் விகிதாசார பிரதிநிதித்துவ முறைமையும் கொண்டமைந்த கலப்பு முறைமையில் தேர்தலை நடத்துவதற்குரிய இணக்கபாடுகள் கட்சிகளிடையே எட்டப்பட்டுள்ள நிலையில் அம்முறையில் தேர்தல் நடத்தப்படும் பட்சத்தில் மொத்த ஒதுக்கீட்டில் 25சதவீதம் பெண்களுக்கு வழங்குவதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மேலும் உள்ளூராட்சி மன்றங்களுக்காக சட்ட வரைபில் சில தொழில்நுட்ப குறைபாடுகள் காணப்படுகின்றன. அவற்றை நிவர்த்தி செய்து இறுதியான முடிவொன்றை எட்டுவதற்காக மீண்டும் எதிர்வரும் புதன்கிழமை கட்சிப்பிரதிநிதிகள் கூட்டம் நடைபெறவுள்ளது என்றார்.