கென்யத் தலைநகர் நைரோபியின் கசரானி விளையாட்டரங்கில் தற்போது நடைபெற்று வரும் உலக இளையோர் மெய்வல்லுநர் விளையாட்டுப் போட்டியின் கலப்பு 4 தர 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியின் இறுதிக்கு இலங்கை அணி தகுதி பெற்றது.
இந்த இறுதிப் போட்டியானது இலங்கை நேரப்படி இரவு 7.45 மணிக்கு நடைபெறும்.
விளையாட்டு விழாவின் முதல் நாளான இன்று முதற்போட்டியாக ஆரம்பமான கலப்பு 4 தர 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் இலங்கை முதலாவது தகுதிகாண் சுற்றில் பங்கேற்றது.
இதில் இந்தியா 3 நிமிடங்கள் 23.39 செக்கன்களில் நிறைவு செய்து முதலிடத்தையும், செக் குடியரசு 3 நிமிடங்கள் 24.15 செக்கன்களில் நிறைவு செய்து இரண்டாவது இடத்தையும், ஜமைக்கா 3 நிமிடங்கள் 24.65 செக்கன்களில் நிறைவு செய்து மூன்றாவது இடத்தையும் பெற்று நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
இதில் போலாந்து மற்றும் இலங்கை முறையே 4 ஆவது மற்றும் 5 ஆவது இடங்களையே பிடித்தன.
இதேவேளை, கலப்பு 4 தர 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியின் இரண்டாவது தகுதிகாண் சுற்றில் நைஜீரியா (3 நிமி.21.66 செக்.), இத்தாலி (3 நிமி.28 செக்.), தென் ஆபிரிக்கா (3 நிமி.30.43 செக்.), ஆகியன முதல் மூன்று இடங்களை பிடித்து நேரடியாக இறுதிப் போட்டிக்கு முன்னேறின.
எவ்வாறாயினும், கலப்பு 4 தர 400 மீற்றர் அஞ்சலோட்டப் போட்டியில் ஒவ்வொரு தகுதிகாண் சுற்றுகளிலும் முதல் மூன்று இடங்களை பிடித்த 6 அணிகள் நேரடியாகவும் ஏனைய 2 அணிகள் சிறந்த நேரப் பெறுதியின் அடிப்படையிலும் இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றன.
அந்த வகையில் போலாந்து (3.நிமி.24.69 செக்.) மற்றும் இலங்கை (3.26.62 செக்.) ஆகிய இரு அணிகளும் ஏனைய அணிகளைக் காட்டிலும் சிறந்த நேரப் பெறுதியில் நிறைவு செய்யிருந்ததால் இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.
எனினும், போலாந்து மற்றும் இலங்கை ஆகியன நேரடியாக தகுதி பெற்ற இத்தாலி மற்றும் தென் ஆபிரிக்காவைக் காட்டிலும் சிறந்த நேரப் பெறுதியில் நிறைவு செய்துள்ளமை கவனிக்கத்தக்கது.