கறுப்பு ப் பூஞ்சை என்றால் என்ன?
இந்தியாவில் கொரோனா தொற்று தீவிரமாக பரவி வரும் நிலையில் , ‘மியூகோர்மைகோசிஸ்’ என பரவலாக அறியப்படும் கறுப்பு பூஞ்சை நோய் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. பாதிக்கப்பட்டவர்களில் 50 சதவிகிதம் வரை இறந்துபோகும் ஆபத்தைக் கொண்ட இந்த நோய், நோய் எதிர்ப்பு சக்தியில் குறைப்பாடு ஏற்படும் போது ஏற்படவல்லது என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
இது தொடர்பில் பி.பி.சி. தமிழ் இணையத்தளத்தில் விஷேட கட்டுரை ஒன்று பதிவிடப்பட்டுள்ள நிலையில், அதில் உள்ள விடயங்கள் வருமாறு:
மியூகோர்மைகோசிஸ் என்பது பூஞ்சையால் ( நுண்ணங்கிகளால்) ஏற்படும் தொற்று. நமது சூழலில் நம்மைச் சுற்றி பூஞ்சைகளை உற்பத்தி செய்யும் துகள்கள் நிறைந்து இருக்கின்றன. உணவுப் பொருள்கள் மீது இவைதான் பூஞ்சைகளை ஏற்படுத்துகின்றன. எல்லோரது உடலுக்குள்ளும் இவை சென்றாலும் அவை தொற்றை ஏற்படுத்துவதில்லை. காரணம் உடலில் இருக்கும் எதிர்ப்பு ஆற்றல்.
நமது உடலில் எதிர்ப்பு சக்தி குறையும்போது பூஞ்சைகள் நம்மைத் தாக்குகின்றன. வேறு நோய்க்காக மருந்துகளை எடுத்துக் கொண்டிருக்கும்போது பூஞ்சைகளை எதிர்த்துப் போராடும் ஆற்றல் உடலுக்குக் குறைகிறது. அந்த நேரத்தில் பூஞ்சைத் தொற்று ஏற்படலாம் என மருத்துவர்கள் கூறுகின்றனர்.
காற்றில் உள்ள பூஞ்சைத் துகள்களை எதிர்ப்பு ஆற்றல் குறைந்த மனிதர்கள் சுவாசிக்கும்போது அவை உடலுக்குள் புகுந்து நுரையீரலைப் பாதிக்கிறது. கவனிக்காமல் விட்டால் மரணத்தை ஏற்படுத்தும் ஆபத்தைக் கொண்டது இந்தப் பாதிப்பு.
தீராத சர்க்கரை நோய், எதிர்ப்பு ஆற்றல் முடக்கம், தீவிர சிகிச்சைப் பிரிவில் நீண்ட காலம் இருப்பது, உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை, வோரிகோனோஸோல் சிகிச்சை ஆகியை மியூகோர்மைகோசிஸ் நோய் ஏற்படுவதற்குக் காரணம் என்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் கூறுகிறது.
மூக்குப் பகுதியில் ஏற்படும் இந்த நோய், விரைவிலேயே தொண்டை, கண்கள், மூளை எனப் பரவிவிடும். இந்தத் தொற்று மூளையை எட்டும் நிலையில் உயிருக்கு ஆபத்தான நோயாக மாறிவிடுகிறது.
முன்னெச்சரிக்கை என்ன?
கட்டுமானப் பணிகள் நடக்கும் தூசு மிகுந்த இடங்களுக்குச் செல்லும்போது முகக் கவசத்தை கண்டிப்பாக அணிய வேண்டும். தோட்ட வேலைகளில் மண்ணைத் தோண்டுவது உள்ளிட்ட பணிகளின்போது கைகள் மற்றும் கால்களை முழுமையாக மறைக்கும் சட்டைகளையும் ஷுக்களையும் அணிய வேண்டும் என ஐ.சி.எம்.ஆர் எனும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி மையம் அறிவுறுத்துகிறது
அறிகுறிகள் என்னென்ன?
கொரோனாவால் பாதிக்கப்பட்டவர்கள், நீரிழிவு நோய் உள்ளவர்கள், எதிர்ப்பு ஆற்றல் முடக்கப்பட்டவர்கள் போன்றோருக்கு சில அறிகுறிகளைக் கொண்டு மியூகோர்மைசிஸ் நோய் இருக்கலாம் என்ற முடிவுக்கு வரலாம்.
மூக்கடைப்பு, மூக்கின் வழியே கறுப்பாகவோ, ரத்தமாகவோ திரவம் வெளியேறுவது, கன்ன எலும்புகளில் வலி ஏற்படுவது போன்றவதை மியூகோர்மைசிஸ் நோய்க்கான முதன்மையான அறிகுறிகள் என ஐ.சி.எம்.ஆர் பட்டியலிடுகிறது. முகத்தின் ஒரு பகுதியில் வலி ஏற்படுவது, உணர்வின்மை, வீக்கமோ போன்றவையும் இதன் அறிகுறிகளாகும். சிலருக்கு மூக்கிற்கும் மேல்வாய்க்கும் இடைப்பட்ட பகுதி கறுப்பாக மாறும்.
பல் வலி, காட்சிகள் மங்கலாகவும் இரட்டையாவும் தெரிவது, காய்ச்சல் போன்றவை ஏற்படும். இவை தவிர மார்பு வலி, மூச்சு விடுவதில் சிரமம் உள்ளிட்டவையும் மியூகோர்மைசிஸ் அறிகுறிகளாகும்.
என்ன செய்ய வேண்டும்?
மியூகோர்மைசிஸ் இருப்பது கண்டறியப்பட்டால் நிச்சயமாக மருத்துவரின் ஆலோசனை இல்லாமல் எந்த மருந்தையும் உட்கொள்ளக்கூடாது. எந்தச் சிகிச்சையும் எடுக்கக்கூடாது. மியூகோர்மைசிஸை கட்டுப்படுத்துவதற்கு முதலில் ஹைபர்கிளைசீமியா எனப்படும் ரத்தச் சர்க்கரை அளவு அதிகரிப்பைக் குறைக்க வேண்டும் என மருத்துவ சிகிச்சை நடைமுறையைக் கூறியிருக்கிறது ஐ.சி.எம்.ஆர்.
நீரிழிவு நோய் இருந்தாலோ, கொரோனாவில் இருந்து குணமடைந்திருந்தாலோ ரத்தத்தின் சர்க்கரை அளவைத் தொடர்ந்து கண்காணித்து வர வேண்டும். ஸ்டீராய்டுகளை சரியான நேரத்தில் சரியான அளவு, சரியான காலத்துக்கு மட்டுமே உட்கொள்ள வேண்டும். ஆன்டிபயாடிக்ஸ், ஆன்டிபங்கல்ஸ் மருந்துகளுக்கும் இது பொருந்தும். ஆக்சிஜன் சிகிச்சை எடுத்துக் கொள்ளும்போது சுத்தமான நீரைப் பயன்டுத்த வேண்டும் எனவும் சிகிச்சைக்கான நடைமுறையை ஐ.சி.எம்.ஆர் கூறியுள்ளது.
யாரை பாதிக்கிறது?
மியூகோர்மைகோசிஸ் எல்லோரையும் பாதிப்பதில்லை என்கிறார் விஞ்ஞான் பிரசார் அமைப்பின் மூத்த விஞ்ஞானி டி.வி. வெங்கேடஸ்வரன். இந்த நோய் அரிதினும் அரிதாகவே கண்டறியப்பட்டிருக்கிறது. நோய் எதிர்ப்பு ஆற்றல் குறைந்த நிலையில் இருப்பவர்கள்தான் பாதிக்கப்படுவதற்கான வாய்ப்பு அதிகம். புற்றுநோய், எச்ஐவி போன்ற பாதிப்புகளுக்கு தீவிர சிகிச்சை எடுப்பவர்களை இது தாக்குகிறது.
கொரோனா தொற்று ஏற்ற மருத்துவமனைகளில் சிகிச்சை தேவைப்படும் அளவுக்கு நோய் தீவிரமாகும்போது பூஞ்சைத் தொற்று ஏற்பட வாய்ப்புண்டு. சாதாரண அறிகுறிகளுடன் கொரோனா தொற்று ஏற்பட்டவர்களுக்கு பூஞ்சை தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்புகள் மிகமிகக் குறைவு என்கிறார் வெங்கேடஸ்வரன்.
கொரோனா தொற்று இல்லாமலும், அதிகமாக மருத்துவமனையில் இருக்க வேண்டிய நோய் உடையவர்களுக்கும், நோய் எதிர்ப்பு ஆற்றலைக் குறைப்பதற்கான மருந்துகளை உட்கொள்வோரையும் பூஞ்சை தாக்குகிறது.
இரு மாதங்களுக்கு முன்பு தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த செவிலியர் ஜெபசெல்விக்கு மியூகோர்மைகோசிஸ் தொற்று ஏற்பட்டது. 46 வயதான ஜெபசெல்வி தூத்துக்குடி மருத்துவக்கல்லூரி மருத்துனையில் 16 வருடங்களாக செவிலியராக பணியாற்றி வருபவர். இவருக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் கொரோனா தொற்று ஏற்பட்டது. இதற்காக அவர் அரசு மருத்துவமனையில் சேர்ந்து சிகிச்சை பெற்றார்.
தொற்றில் இருந்து மீண்ட பிறகும் அவருக்கு தலைவலி, முகத்தில் வீக்கம் போன்றவை இருந்ததால் சோதனை செய்து பார்த்தபோது அவருக்கு மிகவும் அரிதான மியூகோமைகோசிஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டது. முகத்தின் ஒரு பகுதி அழுகிப் போய்விட்டதாகவும் மருத்துவர்கள் தெரிவித்தனர். தற்போது அவர் தனியார் மருத்துவமனையில் தொடர் சிகிச்சை பெற்று வருகிறார் என குறித்த கட்டுரையில் விபரிக்கப்பட்டுள்ளது.