கொழும்பில் கறுப்பு சந்தைக்கு அனுப்புவதற்காக ஹட்டனில் பதுக்கி வைக்கப்பட்டிருந்ததாகக் கூறப்படும் ஒரு தொகை சமையல் எரிவாயுவை பொலிஸாரும், நுகர்வோர் அதிகார சபையினரும் இணைந்து இன்று (23) மீட்டுள்ளனர்.
இது தொடர்பில் சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸாரும், நுகர்வோர் அதிகாரசபை அதிகாரிகளும் அறிவித்துள்ளனர்.
ஹட்டன் பேருந்து தரப்பிடத்துக்கு பின்பகுதியில் உள்ள ‘கொரியர்’ சேவை வழங்கும் நிலையமொன்றிலிருந்தே இவ்வாறு சமையல் எரிவாயு கொள்கலன்கள் மீட்கப்பட்டுள்ளன.
கொழும்புக்கு கொண்டுச் சென்று அதிக விலைக்கு விற்பனை
2.5 கிலோ எடையுடைய 8 லாப் கேஸ் சிலிண்டர்களும், 12.5 கிலோ எடையுடைய 12 லாப் கேஸ் கொள்கலன்களும் மீட்கப்பட்டன என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
“கொழும்புக்கு கொண்டு சென்று அதிக விலைக்கு விற்கும் வியாபாரம் இடம்பெற்று வந்துள்ளது. இது தற்போது அம்பலமாகியுள்ளது” என்று பிரதேச மக்கள் குறிப்பிட்டனர்.
குறித்த கொரியர் சேவை வழங்கும் நிறுவனத்துக்கு நேற்று வெற்று சிலிண்டர்கள் கொண்டு வரப்பட்டுள்ளன, இந்நிலையில் இன்று எரிவாயு நிரப்பட்ட கொல்கலன்கள் அங்கு மிகவும் சூட்சுமமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்தன.
இந்த காட்சிகள் அப்பகுதியில் இருந்த சீ.சீ.டீ.வீ கமராவில் பதிவாகியுள்ளது.
இது தொடர்பில் ஹட்டன் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. பொலிஸாரும், நுகர்வோர் அதிகார சபையினரும் சம்பவ இடத்துக்கு வந்து, கொள்கலன்களை கைப்பற்றினர்.
தமது நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்களுக்கு வழங்கவே எரிவாயு வைக்கப்பட்டிருந்தது என நிறுவனத்தின் பொறுப்பாளர் கூறியுள்ளார்.
எனினும், அவரின் கூற்று பொய்யென தெரியவந்ததையடுத்து, பொலிஸார் கொள்கலன்களை கொண்டு சென்றனர். குறித்த நபருக்கு எதிராக வழக்கு தொடுக்கப்படும் என நுகர்வோர் அதிகார சபை அதிகாரிகள் குறிப்பிட்டனர்.
” எமக்கு கூப்பன் வழங்கப்பட்டாலும் எரிவாயு வழங்கப்படுவதில்லை. இன்னமும் வரிசையில் காத்திருக்கின்றோம். ஆனால் இவர்களுக்கு எப்படி எரிவாயு கிடைக்கின்றது. கறுப்பு சந்தை வியாபாரிகளுக்கு முடிவு கட்டப்பட வேண்டும்” – என மக்கள் வலியுறுத்தினர்.