கர்ப்பிணிப்பெண்ணாக இருந்தாலும் சாதாரண ஒருவராக இருந்தாலும் கொரோனா சிகிச்சை வழங்கப்பட்ட பின்னர் 14 நாட்கள் தனிமைப்படுத்தல் காலம் நிறைவடைந்ததன் பின்னர் தடுப்பூசியைப் பெற்றுக்கொள்ளலாம் என மகப்பேற்று பெண் நோயியல் மருத்துவ நிபுணர் ஜி.சுஜாகரன் வீரகேசரிக்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்தார்.
ஆனால் கொரோனா தொற்று தீவிர மடைந்து அதிதி தீவிர சிகிச்சைப் பிரிவில் (ICU) தீவிர சிகிச்சைபெற்றவர்கள் குறிப்பாக ப்ளாஸ்மாதெரபி (plasma therapy) வழங்கப்பட்டு சிகிச்சை பெற்றவர்கள் 03 மாதத்துக்கு பின்னரே தடுப்பூசியை பெற்றுக்கொள்ள முடியும் எனவும் தெரிவித்தார்.
கேள்வி : கர்ப்பிணிப்பெண்ணொருவருக்கு தொற்று உறுதியானால் தாய், சேய் இருவருமே தொற்றால் பாதிக்கப்ட்டவர்கள் என கருத முடியுமா?
பதில் : இல்லை. கர்ப்பிணிப்பெண்ணொருவர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளார் என்றால் நேரடியாக போய் வயிற்றில் உள்ள குழந்தையை தாக்க முடியுமென கூறமுடியாது.
ஏனென்னெறால் கொரோனா நோய் இரத்த வழியாக சென்று தாக்கக்கூடிய நோய் அல்ல. இது சுவாசநோய் சம்பந்தமான கொரோனா கிருமி. எனவே சுவாச தொகுதியில் தான் இந்தக் கிருமி உள்ளது. ஆகவே தாய்க்கு தொற்று ஏற்பட்டால் சிசுவும் கொரோனாவால் பாதிக்கப்படும் என கருதுவது தவறு.
கேள்வி : குழந்தை பிரசவித்த தாயொருவருக்கு கொரோனா தொற்று உறுதியானால் அவர் குழந்தைக்கு தாய்பால் கொடுக்கலாமா?
பதில் : ஆம் கொடுக்கலாம். ஆனால் சுகாதார வழிமுறைகளை பின்பற்றி இரண்டு முகக்கவசமாவது அணிந்திருத்தல், தனது இரு கைகளையும் நன்றாக கழுவி தூய்மைப்படுத்திக்கொள்ளல் மற்றும் பால் கொடுப்பதற்கு முன்னாள் தனது மார்பகத்தை கழுவி சுத்தம் செய்துக்கொள்ளல் வேண்டும்.
கேள்வி : கர்ப்பிணித் தாய்மார்கள் கொவிட் தொற்றிலிருந்து தன்னை பாதுகாத்துக்கொள்ள என்ன செய்யலாம்? உங்களின் ஆலோசனை என்ன?
பதில் : கர்ப்பிணிப்பெண்களை மற்றவர்களை விட கர்ப்பக்காலத்தில் நோயெதிரப்பு சக்தி சற்று குறைந்தவர்களாகவே இருப்பார்கள். ஆகவேதான் இவர்களுக்கு எந்த ஒரு தொற்றுநோயும் இலகுவாக வந்தடையக்கூடிய சாத்தியம் காணப்படுகிறது.
எனவே கர்ப்பிணிப்பெண்கள் இந்த கொரோனா காலத்தில் மிக அவதானமாக இருக்கவேண்டும். அதாவது முடிந்தளவு வெளியில் செல்வதை தவித்துக்கொள்ளல், குடும்ப உறுப்பினர்கள் வெளியில் சென்று வருபவர்களாக இருந்தால் அவர்களிடம் இருந்து 2 மீற்றர் இடைவெளியை பேணல், கைகைளை அடிக்கடி கழுவுதல், இரண்டு முகக்கவசம் கட்டாயமாக அணிதல் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் தடிமன், தும்மலுடன் இருந்தால் அவர்களை விட்டு விலகி இருத்தல் போன்றவற்றை கடைப்பிடிக்க வேண்டும்.