வெறுப்பையும், மதவெறியையும் விரட்டியடித்த கர்நாடகாவுக்கு நன்றி” என கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு ஒரே கட்டமாக கடந்த 10ம் தேதி வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் பாஜக, காங்கிரஸ், மதச்சார்பற்ற ஜனதா தளம் என மூன்று பெரும் கட்சிகளுக்கிடையே மும்முனை போட்டி நிலவிய நிலையில், மொத்தமாக 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் தேர்தலில் போட்டியிட்டனர்.
கடந்த 10-ம் தேதி நடைபெற்ற தேர்தலில், 73.19 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்நிலையில் . மாநிலம் முழுவதும் உள்ள 36 வாக்கு எண்ணும் மையங்களில் நேற்று காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டு, அதனைத் தொடர்ந்து மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்களில் பதிவான வாக்குகள் எண்ணப்பட்டன.
பெரும்பான்மையான தொகுதிகளில் காங்கிரஸ் கட்சியே முன்னிலை வகித்தது. இதில், காங்கிரஸ் கட்சி 136 இடங்களை கைப்பற்றி ஆட்சியைப் பிடித்தது. இந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக 65 இடங்களில் மட்டுமே வெற்றி பெற்றது. குறிப்பாக, இந்த தேர்தலில் பாஜக ஆட்சியில் இருந்த 13 அமைச்சர்கள் தோல்வியை சந்தித்துள்ளனர். இதனால் காங்கிரஸ் கட்சியினர் காலையிலேயே பட்டாசுகள் வெடித்து, இனிப்புகள் வழங்கி, மேள தாளங்கள் முழங்க கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து, கர்நாடக மாநிலத்தில் காங்கிரஸ் ஆட்சி அமைக்க உள்ள நிலையில், கர்நாடக தேர்தல் முடிவுகள் குறித்து நடிகர் பிரகாஷ்ராஜ் தனது சமூகவலைதள பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், வெறுப்பையும், மதவெறியையும் விரட்டியடித்த கர்நாடகாவுக்கு நன்றி” என பதிவிட்டுள்ளார். மத்திய பாஜக அரசை பிரகாஷ்ராஜ் தொடர்ந்து விமர்சித்து வந்தது குறிப்பிடத்தக்கது.