ரஜினிகாந்த் நடித்துள்ள காலா படத்தை கர்நாடகாவில் வெளியிட கர்நாடகா திரைப்பட வர்த்தக சபை தடை விதித்துள்ளது. ஒருவர் தொழில் செய்வதை எந்த ஒரு அமைப்பும் தடை விதிக்க முடியாது. வர்த்தகத்தில் எளியவரை வலியவர்கள் நசுக்கினாலோ, அழுத்தினாலே இந்திய போட்டிகள் ஆணையத்தில் புகார் தெரிவிக்கலாம்.
அதன்படி அவர்கள் நடவடிக்கை எடுத்தால் அதன் விளைவுகள் கடுமையாக இருக்கும். அதனால் தான் எந்த ஒரு திரையுலக சங்கங்களும் தனி நபர் மீது நடவடிக்கை எடுப்பதை ரெட் போட்டுவிட்டார்கள் என்று சொன்னாலும், அதை அதிகாரப்பூர்வமாக எழுத்து வடிவில் தர மாட்டார்கள். வாய் மொழி உத்தரவாக மட்டுமே தருவார்கள்.
ஆனால், காலா படத்தின் கர்நாடகா தடை விவகாரத்தில் ரஜினிகாந்த் தரப்பில் கர்நாடகா திரைப்பட வர்த்தக சபையை எதிர்த்து எந்த அறிக்கையையும் இதுவரை தரவில்லை. இன்று காலை பத்திரிகையாளர்களை சந்தித்த போது கூட ரஜினிகாந்த் நேற்றுதான் அது நடந்திருக்கிறது, அப்புறம் பார்க்க வேண்டும் என பதிலளித்தார். இருப்பினும் ரஜினிகாந்த் தரப்பில் தடை விதித்த கர்நாடகா வர்த்தக சபையுடனும், காலா படத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சிறிய கட்சிகளுடனும் பேச்சு வார்த்தை நடந்து வருகிறது என்று சொல்கிறார்கள்.
ஒரு தமிழ்ப் படத்திற்கு எதிர்ப்பு தெரித்திருப்பது குறித்து தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர் சங்கம், தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபை, தமிழ்த் திரைப்பட வர்த்தக சபை ஆகியவை கண்டனம் தெரிவித்து ஒரு அறிக்கை கூட இதுவரை வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.