இன்றைக்கும் அவரை நேசிக்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள், அவர் மீண்டும் அரசியல் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
தனது ரசிகர்களாலும் கட்சித் தொண்டர்களாலும் ‘கருப்பு எம்.ஜி.ஆர்’ என்று அன்போடு அழைக்கப்படும் கேப்டன் விஜயகாந்துக்கு இன்று 69வது பிறந்தநாள். உடல்நலம் நலிவுற்ற காரணத்தினால் தற்போது சினிமா நடிப்பதில் இருந்தும், தீவிர அரசியலில் இருந்தும் விஜயகாந்த் விலகியுள்ளார். ஆனால், இன்றைக்கும் அவரை நேசிக்கும் லட்சக்கணக்கான தொண்டர்கள், அவர் மீண்டும் அரசியல் ரீ-என்ட்ரி கொடுக்க வேண்டும் என்று ஆசைப்படுகிறார்கள்.
விஜயகாந்த் கடந்து வந்த பாதை:
* மதுரையின் திருமங்கலத்தில் 1952ம் ஆண்டு ஆகஸ்ட் 25 ஆம் தேதி பிறந்தார்.
* சிறு வயதில் படிப்பு சரியாக வராத நிலையில், விஜயகாந்துக்கு சினிமாவில் கட்டுக்கடங்காத ஆர்வம் அதிகரித்தது. அதன் தொடர்ச்சியாக தன் சொந்த முயற்சியில் சென்னைக்கு வந்து சினிமாவில் நடிக்க வாய்ப்பு தேடினார்.
* 1979ம் ஆண்டு ‘இனிக்கும் இளமை’ படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் விஜயகாந்த் அறிமுகமானார்.
* ‘அம்மன் கோவில் கிழக்காலே’, ‘வைதேகி காத்திருந்தால்’, ‘சட்டம் ஒரு இருட்டறை’ உள்ளிட்ட ஹிட் படங்கள் மூலம் தமிழ்த் திரையுலகின் முக்கிய கதாநாயகனாக உருவெடுத்தார்.
* பல கதாநாயகர்கள் வந்தபோதும், அதிரடி ஆக்ஷன் படங்கள் மூலம் தனக்கென்று தனி பாணி உருவாக்கிய விஜயகாந்த், அரசியலுக்கு வரும் வரை ஹிட் படங்கள் கொடுத்து வந்தார்.
* குறிப்பாக அவரின் சினிமா வாழ்க்கையின் பிற்பகுதியில் ‘ரமணா’ திரைப்படம் ஒரு முத்திரையாக அமைந்தது. வசூல் ரீதியிலும், திரைக்கதை சார்ந்தும் ரமணா, விஜயகாந்தின் சினிமா வாழ்க்கையில் திருப்பத்தை ஏற்படுத்தியது.
* 1999 ஆம் ஆண்டு நடிகர் சங்கத் தலைவராக பொறுப்பேற்ற விஜயகாந்த், சங்கத்துக்கு இருந்த கடன்களை அடைத்தார். நலிவடைந்த கலைஞர்களுக்குப் பல்வேறு சிறப்புத் திட்டங்களை அறிமுகப்படுத்தி நற்பெயர் பெற்றார். இன்றளவும் அவருக்கு சினிமா கலைஞர்கள் மத்தியில் நல்ல பெயர் இருப்பதற்கு இது முக்கிய காரணமாகும்.
* விஜயகாந்துக்கு தமிழீழம் சார்ந்த செயல்பாடுகளில் எப்போதும் அதிக ஈடுபாடு இருந்து வந்துள்ளது. அதன் காரணமாகவே தன் 100வது படத்துக்கு ‘கேப்டன் பிரபாகரன்’ என்று பெயர் வைத்தார் என்றும், அவரது இரு மகன்களில் ஒருவருக்கு விஜய பிரபாகரன் என்று பெயர் வைத்துள்ளதாகவும் சொல்லப்படுகிறது.
* 2000ம் ஆண்டுக்குப் பின்னர் அவர் நேரடி அரசியலுக்கு வருவார் என்று சொல்லப்பட்டது. அதற்குரிய நகர்வுகளை மெல்ல அவர் செய்து வந்தார்.
* 2005 ஆம் ஆண்டு செப்டம்பர் 14 ஆம் தேதி, தேசிய முற்போக்கு திராவிடர் கழகம் என்கிற அரசியல் கட்சியைத் தொடங்கினார் விஜயகாந்த்.
* 2006 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் தனித்துப் போட்டியிட்ட தே.மு.தி.க., 8 சதவீத வாக்குகளுக்கு மேல் பெற்றது. விஜயகாந்த் முதல் தேர்தலிலேயே விருதாச்சலம் தொகுதியில் வெற்றி பெற்று சட்டமன்றத்திற்குள் நுழைந்தார்.
* 2009 ஆம் ஆண்டு நடந்த பாராளுமன்றத் தேர்தலில் 10 சதவீத வாக்குகளைப் பெற்றது தே.மு.தி.க.
* 2011 ஆம் ஆண்டு நடந்த சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க-வுடன் கூட்டணி வைத்து 29 இடங்களில் வெற்றி பெற்ற தே.மு.தி.க., எதிர்க்கட்சி அந்தஸ்தைப் பெற்றது.
* 2014ல் நடந்த பாராளுமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுடன் கூட்டணி வைத்து 14 தொகுதிகளில் போட்டியிட்ட தே.மு.தி.க, ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. தொடர்ந்து 2016ல் நடந்த சட்டசபை தேர்தலில் மக்கள் நலக் கூட்டணி என்கின்ற மூன்றாவது அணிக்கு தே.மு.தி.க தலைமை தாங்கியது. முதல்வர் வேட்பாளராக விஜயகாந்தே முன்னிறுத்தப்பட்டார். அந்த தேர்தலில் ம.ந.கூ ஒரு தொகுதியில் கூட வெற்றி பெறவில்லை. விஜயகாந்தும் படுதோல்வியடைந்தார்.
* 2019 பாராளுமன்ற மற்றும் 2021 சட்டசபை தேர்தல்களில் மீண்டும் தே.மு.தி.க.வுக்கு இறங்குமுகமே ஏற்பட்டது. அதன் வாக்கு விகிதமும் 10 சதவீதத்திலிருந்து சுமார் 1 சதவீதத்துக்கு குறைந்தது.
விஜயகாந்தின் உடல்நல பாதிப்பு அவரது அரசியல் வாழ்க்கையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்தியது. அரசியல் மேடைகளிலும், பொதுத்தளங்களிலும் கடுமையாக (உள்ளது உள்ளபடியே) நடந்து கொண்டதாலும், கட்சிக் கூட்டங்களில் சர்ச்சைக்குரிய வகையில் பேசிய காரணங்களிலும் விஜயகாந்த் கேலிக்கும் கிண்டலுக்கு உள்ளானார். ஆனால் தனிப்பட்ட மனிதராக இன்றும் பலரது நெஞ்சங்களில் அவர் குடிகொண்டுள்ளார்.