கருணைக்கொலை குறித்த சட்டமூலம் அரசியலமைப்புக்கு முரணானது : பீட்டர் ஹொக்கின் புதிய கருத்து!
கனடாவில் கொண்டுவரப்பட்டுள்ள கருணைக்கொலை தொடர்பான சட்டமூலம் நாட்டின் அரசியலமைப்புக்கு முரணானது என்று அந்நாட்டின் வழக்கறிஞரும் அரசியலமைப்பு தொடர்பிலான புத்தகத்தினை எழுதியுள்ளவருமான பீட்டர் ஹொக் தெரிவித்துள்ளார்.
கனடாவில் கருணைக் கொலைக்கு அங்கீகாரம் வழங்கும் சட்டமூலம் ஒன்றை மத்திய லிபரல் அரசாங்கம் கடந்த செவ்வாய்கிழமை வழங்கியது. அதையடுத்து, தற்போது குறித்த விடயம் தொடர்பிலான சட்டம் மூலம் கனேடிய நாடாளுமன்றத்தின் இறுதி அங்கீகாரத்திற்காக கையளிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், பரிந்துரைக்கப்பட்ட குறித்த சட்டமூலம் தொடர்பில் புதிய விதிமுறைகளை அறிவிக்குமாறு கனேடிய உச்ச நீதிமன்றம் மத்திய அரசுக்கு விதித்திருந்த காலக்கெடு முடிவடைந்துள்ளது. இந்நிலையிலேயே கருணைக்கொலைச் சட்டமானது, கடந்த ஆண்டு வழங்கப்பட்ட முக்கிய நீதிமன்ற தீர்ப்புக்கு முரணானது என பீட்டர் ஹொக் தெரிவித்துள்ளார்.
பீட்டர் ஹொக், கனேடிய அரசியலமைப்பு தொடர்பிலான புத்தகத்தினை எழுதியுள்ளமை மட்டுமன்றி, இவரது புத்தகங்களில் காணப்படும் பல்வேறு விடயங்களை கனேடிய உச்ச நீதிமன்றமே வழக்கு விசாரணைகளின்போது பல சந்தர்ப்பங்களில் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.