இலங்கை மகளிர் கிரிக்கெட் அணித் தலைவி சமரி அத்தபத்துவும், துடுப்பாட்ட வீராங்கனை ஹர்ஷித்தா சமரவிக்ரமவும் கரிபியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டிகளில் விளையாட மேற்கிந்தியத் தீவுகளுக்கு பயணமாகினர்.
அயர்லாந்துக்கு எதிரான இரண்டு வகை சர்வதேச மட்டுப்படுத்தப்பட்ட ஓவர் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய அவர்கள் இருவரும் அங்கிருந்தவாறே மேற்கிந்தியத் தீவுகளுக்கு சென்றுள்ளனர்.
நடப்பு சம்பியன் பார்படோஸ் றோயல்ஸ் அணிக்காக சமரி அத்தபத்து விளையாடவுள்ளதுடன் 2022இல் நடைபெற்ற அங்குரார்ப்பண அத்தியாயத்தில் சம்பியனான ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணியில் ஹர்ஷித்தா இணைந்துகொண்டுள்ளார்.
இந்த வருட கரிபியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் சுற்றுப் போட்டி நேற்று (21) ஆரம்பமானது.
இதேவேளை ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிக்கும் பார்படோஸ் றோயல்ஸ் அணிக்கும் இடையிலான போட்டி இன்று (22) நடைபெறவுள்ளது.
மெக் லெனிங் உபாதைக்குள்ளானதால் அவருக்குப் பதிலாக ஹர்ஷித்தா சமரவிக்ரமவை தமது அணியில் ட்ரின்பாகோ நைட் ரைடர்ஸ் இணைத்துக்கொண்டுள்ளது.
வெளிநாடுகளில் நடைபெறும் மகளிர் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் சமரி அத்தபத்துவைத் தொடர்ந்து விளையாடவுள்ள இரண்டாவது இலங்கை வீராங்கனை ஹர்ஷித்தா ஆவார்.
தம்புள்ளையில் நடைபெற்ற இந்தியாவுக்கு எதிரான மகளிர் ரி20 ஆசிய கிண்ண இறுதிப் போட்டியில் ஹர்ஷித்தா ஆட்டம் இழக்காமல் 69 ஓட்டங்களைப் பெற்று இலங்கை முதல் தடவையாக ஆசிய மகளிர் சம்பியனாவதை உறுதி செய்திருந்தார்.
தொடர்ந்து அயர்லாந்துக்கு எதிரான மகளிர் சர்வதேச ரி20 தொடரில் அடுத்தடுத்து அரைச் சதங்கள் குவித்த ஹர்ஷித்த, இரண்டாவது சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் கன்னிச் சதம் குவித்தார்.
இதன் மூலம் சமரி, விஷ்மி ஆகியோருக்கு அடுத்ததாக மகளிர் சரவ்தேச ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் சதம் குவித்த 3ஆவது இலங்கை விராங்கனையானார்.
இவ்வாறாக திறமையை வெளிப்படுத்தியதன் பலனாகவே அவருக்கு கரிபியன் பிறீமியர் லீக்கில் விளையாட வாய்ப்பு கிடைத்துள்ளது.
சமரி அத்தபத்து ஏற்கனவே பார்படோஸ் றோயல்ஸ் அணியுடன் ஒப்பந்தமாகியிருந்தார்.
பிக் பாஷ் லீக் மகளிர் கிரிக்கெட், மகளிர் ஆசிய கிண்ணம் ஆகியவற்றில் சமரி அத்தபத்து துடுப்பாட்டத்தில் அபார ஆற்றல்களை வெளிப்படுத்தியிருந்தார்.