ஐ.பி.எல் தொடரின் 11-வது சீசன் இப்போதே தொடங்கிவிட்டது. ஸ்டார் broadcaster ஆகிவிட, retention கூட ஒரு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி, இத்தொடரின் மீதான எதிர்பார்ப்பைக் கூட்டியுள்ளது. அதுமட்டுமன்றி, முன்னாள் சாம்பியன்கள் சென்னை சூப்பர் கிங்ஸ், ராஜஸ்தான் ராயல்ஸ் கம்பேக் கொடுத்துள்ளதால், இப்போதே விசில்கள் பறக்கத்தொடங்கிவிட்டன. 4-ம் தேதி வெளியிடப்பட்ட தக்கவைக்கப்பட்ட வீரர்களின் பட்டியலில், சில ஆச்சர்யங்கள், சில அதிர்ச்சிகள்! #IPLAuction
2 முறை சாம்பியன் பட்டம் வென்று கொடுத்த கௌதம் கம்பீர் கொல்கத்தா அணியால் தக்கவைக்கப்படவில்லை. ரஹானே, தவான் போன்றோரும் தக்கவைக்கப்படாதது கொஞ்சம் ஷாக்தான். இப்படி அதிர்ச்சியில் ரசிகர்கள் உரைந்திருக்க, சர்ஃபராஸ் கானை ‘ரீடெய்ன்’ செய்து ஆச்சர்யமூட்டியது ஆர்.சி.பி. இந்த retention-ல் அணிகளின் பிளான்தான் என்ன? RTM எனப்படும் ‘ரைட் டூ மேட்ச்’ கார்டு எப்படிப் பயன்படப்போகிறது? இந்த ஆண்டு நடக்கும் ஏலம் எப்படி இருக்கும். எந்தெந்த வீரர்களுக்கு மவுசு ஜாஸ்தி? அனைத்தையும் அலசுவோம்…
மும்பை இந்தியன்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு, டெல்லி டேர்டெவில்ஸ் அணிகள் தலா 3 வீரர்களை தக்கவைத்துள்ளன. ஏலத்தின்போது இந்த அணிகள் இரண்டு முறை RTM வாய்ப்பைப் பயன்படுத்தலாம். சன்ரைஸர்ஸ் ஹைதராபாத், கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிகள் 2 வீரர்களையும், ராஜஸ்தான் ராயல்ஸ், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணிகள் 1 வீரரையும் தக்கவைத்துள்ளன. இந்த நான்கு அணிகளும் அதிகபட்சம் 3 முறை RTM கார்டைப் பயன்படுத்தலாம். 1 வீரரை மட்டுமே தக்கவைத்த அணிகள், ஏலத்தின்போது அதிகபட்சம் 67.5 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம். 2 வீரர்களைத் தக்கவைத்த அணிகள் 59 கோடி ரூபாய் வரை செலவு செய்யலாம். ராயல் சேலஞ்சர்ஸ் 49 கோடி ரூபாய் வரையிலும், 3 வீரர்களைத் தக்கவைத்த மற்ற அணிகள் 47 கோடி ரூபாய் வரையிலும் செலவு செய்ய முடியும். இந்தத் தொகைதான் Retention-ன் போது அணிகள் மிகவும் கவனமாகச் செயல்படக் காரணம்.
3 வீரர்களைத் தக்கவைத்தால் ரூ.33 கோடி செலவாகும். அதனால்தான் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அக்சர் பட்டேலை மட்டும் தக்கவைத்துக்கொண்டது. அதனால் அவர்கள் ஏலத்தின்போது 67.5 கோடி ரூபாய் செலவு செய்யலாம். ஒருவேளை அவர்கள் 3 வீரர்களைத் தேர்வு செய்திருந்தால், மற்ற இருவர் மேக்ஸ்வெல், மில்லர் ஆகியோர்களாகத்தான் இருப்பர். அவர்களையும் தக்கவைத்திருந்தால், 20.5 கோடி ரூபாய் இன்னும் அதிகமாகச் செலவாகி இருக்கும். அதாவது ஒரு வீரருக்கு ரூ.10.25 கோடி ஆகியிருக்கும். அதுவே அவர்களை ஏலத்தின்போது குறைந்த விலைக்கு RTM கார்டு பயன்படுத்தி வாங்கிவிடலாம். வெளிநாட்டு வீரர்கள் என்பதால், இருவரும் சேர்ந்தே 10 கோடி வரைதான் போவார்கள். இதனால், பல கோடிகள் அவர்களுக்கு மிச்சமாகும். ஆனால், அக்சர் பட்டேலுக்கு 12.5 கோடி என்பதும் அதிகம்தான். அவரையும் RTM கார்டு பயன்படுத்தியே வாங்கியிருக்கலாம்.
ரீடெய்ன் செய்ததில் சென்னை சூப்பர் கிங்ஸ், மும்பை இந்தியன்ஸ் அணிகளின் செயல்பாடுகளை கேள்விக்குள்ளாக்கவே முடியாது. 3 டாப் இந்திய வீரர்களை அவர்கள் தக்கவைத்துள்ளனர். ரோஹித் ஷர்மா, ஹர்டிக் பாண்டியா, பும்ரா தாண்டி அவர்களுக்கு ஆப்ஷனே கிடையாது. சென்னை அணியில் மட்டும் ஜடேஜாவா, அஷ்வினா என்ற கேள்வி எழுந்தது. ஆனால், சென்னை அணியினரின் முடிவே சரியானது. ஒரு ஆஃப் ஸ்பின்னருக்குப் பதிலாக, ஜடேஜா போன்ற ஆல்ரவுண்டர் இருப்பது அணிக்கு மிகப்பெரிய பலம். அணியின் லீடிங் ஸ்பின்னராகவும் அவரே செயல்படக்கூடும். அதனால், சி.எஸ்.கே-வின் ‘378’ முடிவு சரியானதே!
டெல்லி டேர்டெவில்ஸ் அணி மோரிஸ், ரிசப் பன்ட், ஸ்ரேயாஸ் ஐயர் ஆகியோரை தக்கவைத்துள்ளது. இந்த மூவருக்காக அவர்கள் 33 கோடி செலவு செய்துள்ளனர். இது கொஞ்சம் ‘அகலக்கால்’ முடிவுதான். மோரிஸ் ஓகே. பேட்டிங், பௌலிங் இரண்டிலும் தாக்கம் செலுத்தக்கூடியவர். மேட்ச் வின்னர். நிச்சயம் ஏலத்தில் பெரிய தொகைக்குப் போயிருப்பார். ஷ்ரேயாஸ் ஐயருக்கும் நல்ல விலை கிடைத்திருக்கும். அவர்கள் இருவரோடு நிறுத்தியிருந்தால், டெல்லி அணியின் செலவு 21 கோடியோடு முடிந்திருக்கும். ஆனால், ரிசப் பன்ட்டுக்காக 12 கோடி அதிகம் செலவு செய்திருக்கிறார்கள். நிச்சயம் அவரை இந்தத் தொகைக்கு ஏலத்தில் எடுத்திருக்க மாட்டார்கள். அதனால், டெல்லி அணியின் இந்த முடிவு கேள்விக்கூறியதே.
இதில் இன்னொரு வேடிக்கையும் இருக்கிறது. தக்கவைக்கப்படும் ‘uncapped’ (இந்திய அணிக்காக விளையாடாத வீரர்கள்) வீரர்களுக்கான தொகை 3 கோடிதான். ஒருவேளை 2 மாதங்களுக்கு முன்பு retention நடந்திருந்தால், ஷ்ரேயாஸ் ஐயருக்கான தொகை 3 கோடியாகத்தான் இருந்திருக்கும். ஏனெனில், அவர் நவம்பர் 1-ம் தேதிதான் முதன்முதலாக இந்திய அணிக்கு விளையாடினார். இந்த 2 மாதத்தில், 9 போட்டிகளில் விளையாடிவிட்டதால், அவருக்கான தொகை 7 கோடியாகிவிட்டது. இவராவது பரவாயில்லை 9 போட்டிகளில் ஆடியுள்ளார். ரிசப் பன்ட் ஆடியுள்ளதோ, ரெண்டே ரெண்டு சர்வதேசப் போட்டிகள்.
அதற்கு அவருக்காகச் செலவு செய்யப்பட்டிருக்கும் தொகை 15 கோடி. ஆக, 11 சர்வதேசப் போட்டிகளுக்கு டெல்லி செலவிட்டிருக்கும் தொகை 22 கோடி! மொத்தமாக 58 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள மோரிஸ், பன்ட், ஷ்ரேயாஸ் ஆகியோருக்கு டெல்லி 33 கோடி செலவு செய்துள்ளது. அதேசமயம், 1,005 சர்வதேசப் போட்டிகளில் விளையாடியுள்ள ‘378’ கூட்டணிக்கு (தோனி, ரெய்னா, ஜடேஜா) சி.எஸ்.கே செலவு செய்திருப்பதும் அதே 33 கோடி. இதுதான் டி-20… இதுதான் ஐ.பி.எல்!
மற்றபடி, கொஞ்சம் புத்திசாலித்தனமாகச் செயல்பட்ட அணி சன்ரைசர்ஸ். வார்னர், தவான், புவனேஷ்வர் குமார், ரஷித் கான் என எக்கச்சக்க நட்சத்திரங்கள். போதாதக்கு ஹூடாவை தக்கவைக்கப்போகிறார்கள் என்றும்கூட வதந்திகள். அத்தனை ஆப்ஷன்கள் இருந்தபோதும், two retentions’ என்று வி.வி.எஸ்.லட்சுமண் சொல்லியபோது புருவங்கள் உயர்ந்தன. அந்த இரண்டும் கூட சரியான தேர்வுகள். வார்னர் & புவி. இரண்டு பேரும் மேட்ச் வின்னர்கள். அவர்கள் இருவருக்கும் 21 கோடி என்பது ஏற்றுக்கொள்ளக்கூடியதே. அந்த 21 கோடியில் கேப்டன், தலைசிறந்த ஓப்பனர், விக்கெட் டேக்கர், டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் எனப் பல பாக்ஸ்களை டிக் செய்துவிட்டது சன்ரைசர்ஸ் நிர்வாகம்.