அவுஸ்திரேலியாவின் தைரியம் மிக்க அணித் தலைவர் பெட் கமின்ஸ் தலைமையில் பெயரிடப்பட்டுள்ள 2023ஆம் ஆண்டுக்கான ஐசிசி உலக டெஸ்ட் அணியில் இலங்கை டெஸ்ட் அணியின் முன்னாள் தலைவர் திமுத் கருணாரட்ன பெயரிடப்பட்டுள்ளார்.
ஐந்து அவுஸ்திரேலிய வீரர்களை உள்ளடக்கிய ஐசிசி உலக டெஸ்ட் அணியில் ஆரம்ப வீரர்களில் ஒருவராக திமுத் கருணாரட்ன பெயரிடப்பட்டுள்ளார்.
2023ஆம் ஆண்டு நடைபெற்ற டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் துடுப்பாட்டம், பந்துவீச்சு ஆகியவற்றில் அதீத திறமையை வெளிப்படுத்தியவர்களில் அதிசிறந்தவர்கள் இந்த அணியில் உள்ளடக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வருடம் 6 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 10 இன்னிங்ஸ்களில் துடுப்பெடுத்தாடிய திமுத் கருணாரட்ன 2 சதங்கள், 3 அரைச் சதங்கள் உட்பட 60.8 என்ற சராசரியுடன் 608 ஓட்டங்களை மொத்தமாக பெற்றார்.
நியூஸிலாந்துக்கு எதிராக நியூஸிலாந்தில் நடைபெற்ற 2 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் 3 அரைச் சதங்கள் குவித்ததன் மூலம் திமுத் கருணாரட்னவின் அபார ஆற்றல் வெளிப்பட்டது.
இந்த அடிப்படையிலேயே ஐசிசி உலக டெஸ்ட் அணியில் அவர் பெயரிடப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஐசிசி உலக டெஸ்ட் அணித் தலைவராக பெட் கமின்ஸ் பெயரிடப்பட்டுள்ளார்.
உலக டெஸ்ட் சம்பியன்ஷிப்பில் அவுஸ்திரேலியாவை சம்பியனாக வழிநடத்தியவர் பெட் கமின்ஸ் ஆவார். அத்துடன் இங்கிலாந்துடனான ஆஷஸ் தொடரையும் தக்கவைத்துக்கொள்ள அவுஸ்திரேலிய அணியை சிறப்பாக வழிநடத்தியிருந்தார்.
இவற்றைவிட கடந்த வருடம் வேகப் பந்துவீச்சாளர்களில் அதிக விக்கெட்களைக் கைப்பற்றியவர் என்ற மைல்கல் சாதனையையும் பெட் கமின்ஸ் தனதாக்கிக்கொண்டார். அவர் 11 போட்டிகளில் 42 விக்டெக்களை மொத்தமாக கைப்பற்றியிருந்தார்.
ஐசிசி உலக டெஸ்ட் அணி விபரம்
உஸ்மான் கவாஜா (அவுஸ்திரேலியா), திமுத் கருணாரட்ன (இலங்கை), கேன் வில்லியம்சன் (நியூஸிலாந்து), ஜோ ரூட் (இங்கிலாந்து), ட்ரவிஸ் ஹெட் (அவுஸ்திரேலியா), ரவிந்த்ர ஜடேஜா (இந்தியா), அலெக்ஸ் கேரி (விக்கெட் காப்பாளர் – அவுஸ்திரேலியா), பெட் கமின்ஸ் (தலைவர் – அவுஸ்திரேலியா), ரவிச்சந்திரன் அஷ;வின் (இந்தியா), மிச்செல் ஸ்டார்க் (அவுஸ்திரேலியா), ஸ்டுவட் ப்றோட் (இங்கிலாந்து).