பங்களாதேஷுக்கு எதிராக சில்ஹெட்டில் இன்று திங்கட்கிழமை (04) இரவு ஆரம்பமாகவுள்ள முதலாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் கமிந்து மெண்டிஸ் பெரும்பாலும் முதல் 3 இடங்களில் துடுப்பெடுத்தாடுவார் என கிரிக்கெட் தெரிவுக் குழுத் தலைவர் உப்புல் தரங்க தெரிவித்தார்.
அத்துடன் சரித் அசலன்கவின் தலைமைத்துவ ஆளுமை வெளிப்படும் எனவும் அவர் நம்பிக்கை வெளியிட்டார்.
ஆப்கானிஸ்தானுக்கு எதிராக தம்புள்ளையில் நடைபெற்ற கடைசி ரி20 கிரிக்கெட் போட்டியில் ஆட்டம் இழக்காமல் 65 ஓட்டங்களைக் குவித்து தனது துடுப்பாட்ட ஆற்றலை கமிந்து மெண்டிஸ் வெளிப்படுத்தியிருந்தார்.
‘ஆப்பாகிஸ்தானுக்கு எதிரான கடைசிப் போட்டியில் கமிந்து மெண்டிஸ் அபாரமாகத் துடுப்பெடுத்தாடி தனது திறமையை வெளிப்படுத்தியிருந்தார். அவர் சிவப்பு பந்து போட்டிகளிலும் வெள்ளைப் பந்து போட்டிகளில் பிரகாசித்து வந்துள்ளார். சர்வதேச ரி20 போட்டியில் முதல் 3 இடங்களுக்குள் துடுப்பெடுத்தாடக்கூடிய ஆற்றல் அவருக்கு இருக்கிறது. இன்றைய போட்டியில் அவிஷ்க பெர்னாண்டோவும் குசல் மெண்டிஸும் ஆரம்ப வீரர்களாக விளையாடுவர். குசல் மெண்டிஸ் அடுத்த இலக்கத்தில் துடுப்பெடுத்தாடுவார்’ என்றார் உப்புல் தரங்க.
கமிந்து மெண்டிஸ் ஒரு சிறந்த துடுப்பாட்ட வீரர் மாத்திரம் அல்லாமல் ஒரு சிறந்த சகலதுறை வீரரும் ஆவார்.
‘துடுப்பாட்ட வரிசையில் முதல் ஐந்து இடங்களில் இடம்பெறும் ஒருவர் பந்துவீசுவது அணிக்கு அனுகூலமாக அமையும். கமிந்து மெண்டிஸிடம் இரண்டு கைளாலும் பந்துவீசக்கூடிய அபூர்வ ஆற்றல் இருக்கிறது. ஆனால், அவர் ஓவ் ஸ்பின்னராகவே பிரதானமாக விளையாடிவருகிறார். உலகக் கிண்ணப் போட்டியின்போது அத்தகைய வீரர் ஒருவர் அணியில் இடம்பெற்று 2 ஓவர்களாவது வீசினால் அது அணிக்கு சாதகமாக இருக்கும். மேலும் ரி20 போட்டிகளில் மட்டுமல்லாமல் சர்வதேச ஒருநாள் மற்றும் டெஸ்ட் போட்டிகளிலும் அவர் விரைவில் இலங்கை அணியில் இடம்பெறுவார் என எதிர்பார்க்கிறேன்’ என அவர் மேலும் கூறினார்.
பங்களாதேஷுக்கு எதிரான முதல் இரண்டு சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டிகளில் பதில் அணித் தலைவராக விளையாடவுள்ள சரித் அசலன்கவின் தலைமைத்துவம் தொடர்பாக கருத்து வெளியிட்ட உப்புல் தரங்க,
’19 வயதுக்குட்பட்ட இலங்கை அணிக்கு தலைவராக விளையாடிய அனுபவசாலி சரித் அசலன்க. அவர் அணியில் ஒரு பெறுமதிமிக்க வீரராவார். அவர் கணிசமான ஓட்டங்களைப் பெறுவதற்கு தனது இன்னிங்ஸை கட்டி எழுப்ப பயன்படுத்தும் மூலோபாயத்தின்மூலம் அவரது திறமைக்கு சான்று பகர்கிறது. அவர் இந்த இரண்டு போட்டிகளில் தனது சிறந்த தலைமைத்துவ குணாம்சங்களை வெளிப்படுத்துவார் என நம்புகிறேன்’ என்றார்.
உப்புல் தரங்கவின் கூற்றுக்கு அமைய பங்களாதேஷுக்கு எதிராக இன்று இரவு நடைபெறவுள்ள முதலாவது சர்வதேச ரி20 போட்டியில் அவிஷ்க பெர்னாண்டோ, குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், சதீர சமரவிக்ரம, சரித் அசலன்க (பதில் அணித் தலைவர், ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க ஆகியோர் துடுப்பாட்ட வரிசையில் முதல் 7 இலக்கங்களில் இடம்பெறுகின்றனர்.
பந்துவீச்சில் மஹீஷ் தீக்ஷன, அக்கில தனஞ்சய, பினுர பெர்னாண்டோ, மதீஷ பத்திரண ஆகியோர் இடம்பெறுவர்.
ஏஞ்சலோ மெத்யூஸ், தசுன் ஷானக்க, கமிந்து மெண்டிஸ் ஆகியோரும் பந்துவீச்சில் பங்களிப்பு செய்யவுள்ளனர்.
இதேவேளை, 2 போட்டி தடைக்குட்பட்டுள்ள வனிந்து ஹசரங்க 3ஆவது போட்டியில் அணித் தலைமையை மீண்டும் போறுப்பேற்பார்.