அமெரிக்காவின் துணை ஜனாதிபதி கமலாஹாரிஸ் உத்தியோகப்பூர்வ பயணமாக குவாத் மாலாவுக்கு செல்ல திட்டமிட்டிருந்தார்.
இந்நிலையில், நேற்று நண்பகல் ஆண்ட்ரூஸ் விமானப்படை தளத்தில் இருந்து தனி விமானத்தில் புறப்பட்டார். இதன்போது, அவர் சென்ற விமானத்தில் திடீர் தொழில்நுட்ப கோளாறு ஏற்பட்டுள்ள நிலையில், அதனை சரி செய்ய விமானி முயற்சி செய்தபோதும், அதற்கு பலன் கிடைக்கவில்லை.
எனவே கமலா ஹாரிஸ் சென்ற விமானம் மீண்டும் அதே விமான நிலையத்துக்கு திரும்பி, அங்கேயே தரை இறக்கப்பட்டது. பின்னர் வேறு விமானத்தில் கமலா ஹாரிஸ், தனது பயணத்தை தொடர்ந்ததாக இந்நாட்டு ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மேலும், அமெரிக்க துணை ஜனாதிபதியாக கமலா ஹாரிஸ் பதவியேற்றதன் பின்னரான உத்தியோகப்பூர்வ பயணமாக அவர் செல்லும் முதல் பயணம் இது என்பது குறிப்பிடத்தக்கது.