எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் தீப்பரவல் ஏற்பட்டமையால், நீர்கொழும்பு முதல் பாணந்துறை வரையான கடற்கரைப் பகுதி கடுமையான பாதிப்புகளுக்கு உள்ளாகியுள்ளதாக மத்திய சுற்றுச்சூழல் அதிகாரசபை தெரிவித்துள்ளது.
அத்துடன், உஸ்வெட்டகெய்யாவ மற்றும் சரக்குவ முதலான கடற்கரைகளுக்கும் பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக அதிகாரசபை குறிப்பிட்டுள்ளது.
இந்நிலையில் குறித்த கடற்கரைகளில் தேங்கியுள்ள பொருட்களை அகற்றும் பணிகள் முனக்னெடுக்கப்படுவதாக அதிகார சபையின் வேதியியல் மற்றும் அபாயகரமான கழிவு மேலாண்மை பிரிவு பணிப்பாளர் அஜித் வீரசுந்தர தெரிவித்துள்ளார்.
இதேவேளை எக்ஸ்-ப்ரஸ் பேர்ல் கப்பலில் ஏற்பட்ட தீப்பரவல் காரணமாக உருவாகியுள்ள அபாயகரமான கழிவுகளை முகாமை செய்வது தொடர்பான வழிகாட்டல்கள் மற்றும் யோசனைகளும் மத்திய சுற்றாடல் அதிகார சபையால், கடல்சார் பாதுகாப்பு அதிகாரசபை உள்ளிட்ட உரிய நிறுவனங்களுக்கு அனுப்பப்பட்டுள்ளன.
குறித்த கப்பலில் ஏற்பட்ட அனர்த்தம் காரணமாக உருவாகியுள்ள முழு கழிவுகளையும் அபாயகர கழிவுகளாக அறிவிப்பதற்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை நடவடிக்கை எடுத்துள்ளது.
இதற்கமைய 11 யோசனைகள் சம்பந்தப்பட்ட நிறுவனங்களுக்கு மத்திய சுற்றாடல் அதிகாரசபை அனுப்பவுள்ளது.
எரியுண்ட கப்பலின் பாகங்கள் மற்றும் கழிவுகள் கரையொதுங்கக்கூடிய கடற்கரை மற்றும் சேகரிக்கப்படும் இடங்கள் என்பன அபாய பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளதுடன், கரையொதுங்கும் பொருட்களை தொட வேண்டாம் என பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சேகரிக்கப்படும் கழிவுகளை வெளியாட்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக காவல்துறை அல்லது கடற்படையின் பாதுகாப்பில் வைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என அந்த வழிகாட்டல்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.