றோயல் கலம்போ கோல்வ் கழக புல்தரையில் நடைபெற்ற கனிஷ்ட பகிரங்க கோல்வ் சம்பியன்ஷிப் 2022 போட்டியில் ஆரம்பம் முதல் கடைசி வரை முன்னிலையில் இருந்த கனஸ் குமார் தனுஷன், சிறுவர்களுக்கான தங்கப் பிரிவில் சம்பியன் பட்டத்தை சுவீகரித்து வரலாறு படைத்தார்.
கனிஷ்ட பகிரங்க கோல்வ் போட்டியில் சம்பயினான கனஸ் குமார் தனுஷனுன் வெற்றிக்கிண்ணத்தை றோயல் கலம்போ கோல்வ் கழகத் தலைவர் மைக்கல் பெரேரா மாகலவிடமிருந்து பெறுவதையும் பிரிமா நிறுவன பொது முகாமையாளர் சஜித் குணரட்ன, தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் சூழ நிற்பதையும் படத்தில் காணலாம்.
…………………………………….
றோயல் கலம்போ கோல்வ் கழக கனிஷ்ட அபிவிருத்தி பிரிவினால் கழக புல்தரையில் அண்மையில் நடத்தப்பட்ட 18 குழிகளைக் கொண்ட தங்கப் பிரிவு கோல்வ் போட்டியில் 15 வயதுக்கும் 18 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்கள் பிரிவில் 19 கோல்வ் வீரர்களும் சிறுமிகள் பிரிவில் 9 பேரும் போட்டியிட்டனர்.
54 குழிகளைக் கொண்ட 3 நாள் கோல்வ் போட்டியில் நிர்ணயிக்கப்பட்ட 222 நகர்வுகளை விட 7 நகர்வுகள் குறைவாக 215 நகர்வுகளில் போட்டியை நிறைவு செய்த தனுஷன் 5 நகர்வுகள் வித்தியாசத்தில் முதலாம் இடத்தைப் பெற்று கனிஷ்ட கோல்வ் சம்பியன் ஆனார்.
முதலாம் நாளன்று 73 நகர்வுகளிலும் 2ஆம் மற்றும் 3ஆம் நாட்களில் தலா 71 நகர்வுகளிலும் தனுஷன் போட்டியை நிறைவுசெய்தார்.
தங்கப் பிரிவு வெற்றியாளர்கள்: நிரேஷ் தெஜ்வானி (2ஆம் இடம்), கனஸ் குமார் தனுஷன் (சம்பியன்), யனிக் குமார (3ஆம் இடம்), சன்கநாத் கேசர (4ஆம் இடம்)
……………………………………..
அப் போட்டியின் கடைசி நாளன்று 68 நகர்வுகளில் 18 குழிகளை நிறைவு செய்த நிரேக் தெஜ்வானி மொத்தமாக 220 நகர்வுகளில் (78, 74, 68) 2ஆம் இடத்தையும் நடப்பு சம்பியன் யனிக் குமார 222 நகர்வுகளுடன் (78, 72, 72) 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
2022 இளையோர் ஒலிம்பிக் விளையாட்டு விழாவில் இலங்கை சார்பாக பங்குபற்ற தனுஷன் தெரிவாகியிருந்தார். ஆனால், அவ் விளையாட்டு விழா கொவிட் – 19 காரணமாக 4 வருடங்களால் 2026க்கு பிற்போடப்பட்டதால் அவருக்கு கிடைக்கவிருந்த அரிய வாய்ப்பு நழுவிப் போயிற்று.
கடந்த ஆகஸ்ட் மாதம் நடைபெற்ற கனிஷ்ட மெச் – ப்ளே சம்பியன்ஷிப்பில் இரண்டாம் இடததைப் பெற்ற தனுஷனுக்கு இந்த வெற்றி பெரு மகிழ்ச்சியைக் கொடுத்துள்ளது.\
கனிஷ்ட பகிரங்க கோல்வ் வெற்றியாளர்கள் கெய்ட்லின் நோர்ட்டன், காயா தலுவத்த, கனஸ் குமார் தனுஷன், ரெஷான் அல்கம, ரெவான் அமரசிங்க ஆகியோர் பிரதம அதிதி மற்றும் விசேட அதிதிகளுடன் இணைந்து எடுத்துக்கொண்ட படம். (படப்பிடிப்பு: எஸ். ரமேஷ்)
………………………………………………………………
‘கனிஷ்ட பிரிவில் சம்பியனாக வேண்டும் என்ற குறிக்கோளுடன் கடந்த சில வருடங்களாக விளையாடிவந்தேன். இம்முறை அந்தக் குறிக்கோளை நிறைவேற்றிக்கொண்டதையிட்டு பெரு மகிழ்ச்சி அடைகிறேன். சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற கனிஷ்ட மெச் ப்ளே கோல்வ் போட்டியில் மயிரழையில் சம்பியன் பட்டததைத் தவறவிட்டேன். இப்போது இந்த வெற்றி எனக்கு பெரும் உற்சாகத்தையும் நம்பிக்கையையும் கொடுத்துள்ளது. எதிர்காலத்தில் சர்வதேச மட்டத்தில் இலங்கைக்கு பதக்கம் வென்றுகொடுப்பதே எனது இலட்சியமாகும்’ என கனிஷ்ட பிரிவில் சம்பயினான தனுஷன் தெரிவித்தார்.
காயா தலுவத்த சம்பியன்
18 குழிகளைக் கொண்ட சிறுமிகளுக்கான தங்கம் மற்றும் வெள்ளிப் பிரிவில் நடப்பு சம்பியன் காயா தலுவத்த 209 நகர்வுகளில் (71, 67, 71) வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தைத் தக்கவைத்துக்கொண்டார்.
கனிஷ்ட பகிரங்க கோல்வ் சிறுமிகள் பிரிவில் சம்பியனான காயா தலுவத்த வெற்றிக் கிண்ணத்தை தேசிய ஒலிம்பக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியத்திடமிருந்து பெறுவதைப் படத்தில் காணலாம்.
…………………………………………………….
தனுஷனைப் போன்றே போட்டியின் ஆரம்பத்திலிருந்து மூன்று நாட்களும் முன்னிலையில் இருந்த காயா தலுவத்த சம்பியன் பட்டத்தை உறுதி செய்துகொண்டார்.
சிறுமிகளுக்கான தங்கம் மற்றும் வெள்ளிப் பிரிவு வெற்றியாளர்கள்: தனுஷி வனசிங்க (4ஆம் இடம்), ஷெரின் பாலசூரிய (2ஆம் இடம்), காயா தலுவத்த (சம்பியன்), தெவின்கா கனக்-ஈஸ்வரி (3ஆம் இடம்)
…………………………………..
அவரை விட 28 நகர்வுகள் கூடுதலாக எடுத்துக்கொண்ட ஷெரின் பாலசூரிய 237 நகர்வுகளில் (82, 78, 77) 2ஆம் இடத்தையும் தெவின்கா கனக்-ஈஸ்வரி 241 நகர்வுகளில் (76, 80, 85) 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
12 வயதுக்கும் 14 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களுக்கான 18 குழிகளைக் கொண்ட வெள்ளிப் பிரிவில் ரேஷான் அல்கம 206 நகர்வுகளில் வெற்றிபெற்று சம்பியன் பட்டத்தை சுவீகரித்தார்.
வெள்ளிப் பிரிவு வெற்றியாளர்கள்: ஜேக்கப் நோர்ட்டன் (4ஆம் இடம்), ஆதித்ய வீரசிங்க (3ஆம் இடம்), ரேஷான் அல்கம (சம்பியன்), தேஜஸ் ரதிஸ் காந்த் (2ஆம் இடம்).
…………………………………………………………
முதலாம் நாளன்று நிர்ணயிக்கப்பட்ட 74 நகர்வுகளைவிட 6 நகர்வுகள் குறைவாக 68 நகர்வுகளில் 18 குழிகளை நிறைவுசெய்த ரேஷான் அல்கம, 2ஆம் நாளன்று 73 நகர்வுகளில் நிறைவு செய்து தொடர்ந்து முதலிடத்தில் இருந்தார்.
கடைசி நாளன்று அற்புதமாக விளையாடிய ரேஷான் 65 நகர்வுகளில் போட்டியை நிறைவுசெய்து சம்பயின் பட்டத்தை வென்றெடுத்தார்.
அப் பிரிவில் தேஜஸ் ரதிஸ் காந்த் (230 நகர்வுகள்) 2ஆம் இடத்தையும் ஆதித்ய வீரசிங்க (231 நகர்வுகள்) 3ஆம் இடத்தையும் பெற்றனர்.
கடந்த வருடம் வெண்கலப் பிரிவில் சம்பியனான தெஜஸ் ரதிஸ் காந்த் இம்முறை வெள்ளிப் பிரிவில் தனது முதல் முயற்சியில் திறமையாக விளையாடி 2ஆம் இடத்தைப் பெற்றது பாராட்டுக்குரியதாகும்.
10 வயதுக்கும் 11 வயதுக்கும் இடைப்பட்ட சிறுவர்களுக்கான வெண்கலப் பிரிவில் கெய்ட்லின் நோர்ட்டன் (273 நகர்வுகள்) சம்பயினானதுடன் சக்கீப் ஸுஹார் (276 நகர்வுகள்) 2ஆம் இடத்தையும் அனுஜ மெத்சர (278 நகர்வுகள்) 3ஆம் இடத்தையும் யெஹன்சா சேனாநாயக்க 4ஆம இடத்தையும் பெற்றனர். பெற்றனர்.
வெண்கலப் பிரிவு வெற்றியாளர்கள்: அனுஜ மெத்சர (3ஆம் இடம்), யெஹன்ச சேனாநாயக்க (4ஆம் இடம்), சக்கீப் ஸுஹெய்ர் (2ஆம் இடம்), கெய்ட்லின் நோர்ட்டன் (சம்பியன்)
………………………………………………………….
9 வயது மற்றும் 9 வயதுக்குட்பட்ட சிறுவர்களுக்கான செப்புப் பிரிவில் (9 குழிகள்) ரெவான் அமரசிங்க (120 நகர்வுகள்) சம்பியனானார்.
செப்புப் பிரிவு வெற்றியாளர்கள்: மிஹ்னெலி ஹேரத் (4ஆம் இடம்), டனிக் தலுவத்த (3ஆம் இடம்), ரெவான் அமரசிங்க (சம்பயின்), யுவன் ரதிஸ் காந்த் (2ஆம் இடம்), ரிச்சர்ட் மாகல (5ஆம் இடம்).
……………………………………………………
தேஜஸின் இளைய சகோதரரான யுவன் ரதிஸ் காந்த் (131 நகர்வுகள்) 2ஆம் இடத்தையும் டனிக் தலுவத்த (142 நகர்வுகள்) 3ஆம் இடத்தையும் மிஹ்னெலி ஹேரத் 4ஆம் இடத்தையும் றிச்சர்ட் மாகல 5ஆம் இடத்தையும் பெற்றனர். பெற்றனர்.
கனிஷ்ட பகிரங்க கொல்வ் பிரிவில் சம்பியனான தனுஷனுக்கு 2 வருடங்களாக தேசிய ஒலிம்பிக் குழு வழங்கிய அனுசரணைக்கு பிரதிபலன் கிடைத்ததாக பரிசளிப்பு வைபவத்தில் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு பேசிய தேசிய ஒலிம்பிக் குழுத் தலைவர் சுரேஷ் சுப்ரமணியம் தெரிவித்தார்.
அத்துடன் கோல்வ் விளையாட்டில் தங்களது பிள்ளைகளைப் பங்குபற்றச் செய்துவரும் பெற்றோரை பாராட்டிய அவர், செனகல் 2026 இளையோர் ஒலிம்பிக் கோல்வ் விளையாட்டில் இலங்கைக்கு பதக்கம் வென்று கொடுக்கக்கூடிய வீர, வீராங்கனைகளை இந்தப் போட்டி மூலம் இப்போதிருந்தே தயார்படுத்த வேண்டும் எனவும் குறிப்பிட்டார்.
இப் போட்டிக்கு பிரிமா சன்ரைஸ் ப்றெட் 14ஆவது வருடமாக அனுசரணை வழங்கியிருந்ததுடன் பரிசளிப்பு வைபவத்தில் பிரிமா நிறுவனத்தின் பொது முகாமையாளர் சஜித் குணரட்ன விசேட அதிதியாக கலந்து கொண்டு சிறப்பித்தார்.