கனடா விநிபெக் அருங்காட்சியகத்தில் இரத்த கறைபடிந்த மலாலாவின் சீருடை!
உரிமைகள் தொடர்பான ஆர்வலரும் அமைதிக்கான நோபல் பரிசு வென்றவருமான பாகிஸ்தானின் மலாலா யூசஃப்சாய் கடந்த 2012 ஆம் ஆண்டு தலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டபோது அவர் அணிந்திருந்த சீருடை தற்போது கனேடிய அருங்காட்சியகத்தில் வைக்கப்படடுள்ளது.
இரத்தக்கறைபடிந்த மலாலாவின் சீருடை மனித உரிமைகள் அமைப்பினால் இவ்வாறு விநிபெக்கில் அமைந்துள்ள அருங்காட்சியகத்தில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.தைரியமான பெண், கல்விக்கான மலாலாவின் போராட்டம் என்பதை சித்தரிப்பதாக சென்ற வெள்ளிக்கிழமை முதல் விநிபெக்கில் வைக்கப்பட்டுள்ள அவருடைய சீருடை எதிர்வரும் 2017 ஆம் ஆண்டு மார்ச் மாதம் வரை காட்சிப்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து கருத்து தெரிவித்த அருங்காட்சியகத்தின் பொறுப்பாளர், ‘மனித உரிமை விவகாரங்கள், குழந்தைகளின் உரிமைகள், குறிப்பாக கல்வி உரிமை இவற்றிற்காக போராடும் மலாலாவின் சீருடை இங்கு வைக்கப்பட்டுள்ளமை மிகவும்; முக்கியமான கண்காட்சி.’ என தெரிவித்துள்ளார்.எனினும் உலகம் முழுவதும் பாலினம் சார்ந்த பாகுபாடும் வன்முறையும் நீடித்தவாறே உள்ளது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
விநிபெக் அருங்காட்சியகத்தில் காண்பிக்கப்படும் இந்த கண்காட்சியில், குழந்தைகளின் உரிமைகளின் சின்னமாக தனது சீருடையின் முக்கியத்துவத்தை விளக்கும் மலாலாவின் காணொளி பதிவும் வைக்கப்பட்டுள்ளது. இந்த காணொளி பதிவில் குழந்தைகளின் சக்தி எதனையும் மாற்றக்கூடியது என்ற அர்த்தத்தில் 2014 ஆம் ஆண்டு தனக்கு வழங்கப்பட்ட நோபல் பரிசு குறித்தும் அவர் பேசியுள்ளார்.இந்த பொருட்கள் யாவும் சிறிது காலத்திற்கு மலாலாவிடம் இருந்து கடனான பெறப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.