கனடா விஞ்ஞானிகளின் உலக சாதனை! மனித முடியை விட சிறிய தேசியக் கொடி வடிவமைப்பு!
மனித முடியை விட நூறில் ஒரு பங்கு அளவு கொண்ட உலகின் மிக நுண்ணிய தேசியக் கொடியை வடிவமைத்து கனடா விஞ்ஞானிகள் உலக சாதனை படைத்துள்ளனர்.
கனடாவில் உள்ள வாட்டர்லூ பல்கலைக்கழகத்தின் குவான்டம் கம்யூட்டிங் பிரிவைச் சேர்ந்த நாதன் நெல்சன் பிட்ஸ்பேட்ரிக் மற்றும் பொறியியல் மாணவர் நடாலியே பிரிஸ்லிங்கர் பின்சின் ஆகிய இருவருமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
குறித்த இருவரும் இணைந்து கனடாவின் 150ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு இந்தத் தேசியக் கொடியை வடிவமைத்துள்ளனர்.
சிலிக்கன் உறையில் எலக்ட்ரான் பீம் லித்தோகிராபி தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள இந்த தேசியக் கொடியை வெறும் கண்ணால் பார்க்க முடியாது.
1.178 மைக்ரோ மீட்டர் நீளம் கொண்ட இந்த தேசியக் கொடியை எலக்ட்ரான் நுண்ணோக்கி உதவியுடனேயே பார்க்க முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, கின்னஸ் புத்தகத்தில் இடம்பிடித்துள்ள இந்த தேசிய கொடியில், கனடாவின் 150 ஆவது ஆண்டு விழாவுக்கான அதிகாரப்பூர்வ இலச்சினை முத்திரைப் பொறிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.