கனடா அனுப்புவதாக தமிழ் இளைஞர்களின் பணத்தை மோசடி செய்த நபர் ஒருவரை விளக்க மறியலில் வைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கனடாவிற்கு செல்ல வீசா பெற்றுத் தருவதாக கூறி இரண்டு தமிழ் இளைஞர்களிடம் 34 லட்சம் ரூபா பணம் மோசடி செய்யப்பட்டுள்ளது.
நிதி மோசடி விசாரணைப் பிரிவினர் நேற்று இந்த சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு சந்தேகநபர்களை கொழும்பு கோட்டே நீதிமன்றில் முன்னிலைப்படுத்தியிருந்தனர்.
ஒரு சந்தேகநபரை விளக்கமறியலில் வைக்குமாறும் மற்றுமொரு பெண் சந்தேகநபரை பிணையில் விடுதலை செய்வதாகவும் கோட்டே நீதவான் லங்கா ஜயரட்ன உத்தரவிட்டுள்ளார்.
கொலன்னாவ பகுதியைச் சேர்ந்த இந்திக்க லக்மால் என்பவரே இவ்வாறு பணத்தை மோசடி செய்துள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
மதூசி பிரசஞ்சனி பெரேரா என்ற பெண் சந்தேகநபரை பத்தாயிரம் ரூபா பிணையில் விடுதலை செய்யுமாறு நீதவான் உத்தரவிட்டார்.
வீசா பெற்றுக்கொள்ள கனேடிய பல்கலைக்கழகத்திற்கு வங்கியின் வைப்புப் புத்தகத்தை காண்பிக்க வேண்டும் எனவும் அதனால் அவற்றை தம்மிடம் ஒப்படைக்குமாறும் சந்தேகநபர், பாதிக்கப்பட்டவர்களிடம் கூறியுள்ளார்.
இதன்படி குறித்த இரண்டு தமிழ் இளைஞர்களும் வங்கி வைப்புப் புத்தகங்களை சந்தேகநபரிடம் ஒப்படைத்துள்ளனர்.
அதன் பின்னர் குறித்த சந்தேகநபர் போலி கையொப்பங்களை இட்டு பெல்மடுல்லவில் அமைந்துள்ள வங்கியொன்றில் 10 லட்சம் ரூபாவும், இரத்தினபுரியில் அமைந்துள்ள வங்கியொன்றில் 24 லட்சம் ரூபாவும் மோசடியான முறையில் கையொப்பமிட்டு பெற்றுக்கொண்டுள்ளார்.
ஊழல் மோசடி விசாரணைப் பிரிவினர் நடத்திய விசாரணைகளின் மூலம் இந்த விடயம் தெரியவந்துள்ளது.
இந்த மோசடிக்கு வங்கிகளின் முகாமையாளர்களும் ஒத்துழைப்பு வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.