கனேடிய மாகாணமான சஸ்காட்செவனில் அமைந்துள்ள பழங்குடியின குழந்தைகளுக்கான முன்னாள் குடியிருப்புப் பள்ளியின் தளத்தலிருந்து 751 கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
“இது ஒரு வெகுஜன புதைகுழி தளம் அல்ல. இவை அடையாளம் குறிக்கப்படாத கல்லறைகள்” என்று அதிகாரிகள் கூறியுள்ளனர்.
மாகாண தலைநகர் ரெஜினாவிலிருந்து 87 மைல் (140 கி.மீ) தொலைவில் உள்ள மேரிவல் இந்தியன் ரெசிடென்ஷியல் பள்ளி வளாகத்திலேயே இந்த கல்லறைகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இந்த கல்லறைகளில் எத்தனை குழந்தைகள் புகைக்கப்பட்டுள்ளனர் என்பது குறித்து தெளிவானத் தகவல்கள் வெளியாகவில்லை.
குறித்த குடியிருப்புப் பள்ளி 1899 – 1997 வரை இப்பகுதியில் இயங்கியது. 1970 ஆம் ஆண்டில் கத்தோலிக்க தேவாலயம் பள்ளியின் மேற்பார்வையை நிறுத்தியபோது கோவெஸ் ஃபர்ஸ்ட் நேஷன் இந்த இடத்தை எடுத்துக் கொண்டது.
இந்த கண்டுபிடிப்பு குறித்து மிகவும் வருத்தப்படுவதாக கனேடிய பிரதமர் ஜய்டின் ட்ரூடோ தெரிவித்துள்ளார்.
கனடாவின் தென் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஸ் கொலம்பியா பழைய காம்ப்லூஸ் இந்தியன் குடியிருப்பு பள்ளி தளத்தில் சில வாரங்களுக்கு முன்னர் 215 பழங்குடியின குழந்தைகளின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
இந் நிலையில் இக் கண்டுபிடிப்புக்கள் கனடா நடத்திய “இனப்படுகொலையை” வெளிப்படுத்தியுள்ளது.
கடந்த 15 ஈம் நூற்றாண்டின் இறுதியில் கனடாவில் ஐரோப்பியர்கள் கால்பதித்தனர். ஆரம்பத்தில் பிரான்ஸ் ஆட்சியின் கீழ் இருந்த அந்த நாடு கடந்த 1763 ஆம் ஆண்டில் பிரிட்டன் கட்டுப்பாட்டில் வந்தது.
1982 ,ல் கனடா தனிநாடாக உதயமானது. தற்போது வரை பிரிட்டன் ராணி இரண்டாம் எலிசபெத்தே கனடாவின் ராணியாகவும் இருக்கிறார்.
ஐரோப்பியர்கள் கனடாவில் குடியேறியபோது அங்கு இனுவிட், மெயிரி உள்ளிட்ட பல்வேறு பழங்குடி மக்கள் வசித்துவந்தனர். அவர்கள் செவ்விந்தியர்கள் அல்லது இந்தியர்கள் என்ற அடைமொழியுடன் அழைக்கப்படுகின்றனர்.
ஐரோப்பியர்களின் குடியேற்றத்துக்கு கனடாவின் பூர்வகுடி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். அந்த மக்களை ஐரோப்பியர்கள் இனப் படுகொலை செய்தனர். இலட்சக்கணக்கான பழங்குடி மக்கள் கொல்லப்பட்டதாக வரலாற்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர்.
பிரிட்டிஷ் ஆட்சிக் காலத்தில் கத்தோலிக்க கிறிஸ்தவ அமைப்புகள் சார்பில்பூர்வகுடி குழந்தைகளுக்காக விடுதியுடன்கூடிய பள்ளிகள் நடத்தப்பட்டன.
கடந்த 1863 முதல் 1998 ஆண்டு வரையிலான காலத்தில் சுமார் 1.5 இலட்சத்துக்கும் மேற்பட்ட பழங்குடி குழந்தைகள், பெற்றோரிடம் இருந்து வலுக்கட்டாயமாக பிரிக்கப்பட்டு உறைவிட பள்ளிகளில் சேர்க்கப்பட்டனர். குழந்தைகளை அனுப்ப மறுக்கும் பெற்றோர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
அப்போது ஏராளமான குழந்தைகள் இனப்படுகொலை செய்யப்பட்டதாகக் கூறப்படுகிறது. இதை உறுதிப்படுத்தும் வகையில் மேற்கண்ட கண்டுபிடிப்புக்கள் அமைந்துள்ளன.