கனடாவில் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு இலகுவில் வதிவிட உரிமை – அமைச்சர் மக்கலம்!
கனடாவில் பணிபுரியும் வெளிநாட்டுப் பணியாளர்களுக்கு வதிவிட உரிமையும், பின்பு குடியுரிமையும் வழங்கும் நடைமுறைகளை இலகுவாக்க இருப்பதாக குடிவரவுத்துறை அமைச்சர் ஜோன் மக்கலம் கூறினார்
CTV தொலைக்காட்சியின் “கேள்வி நேரம்” எனும் தேசிய அரசியல் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அமைச்சர் மக்கலம் அவர்கள் , இந்நடைமுறை தொடர்பாக விளக்கங்கள் எதனையும் அளிக்கவில்லை. ஆயினும் இது தொடர்பான பாராளுமன்ற அறிக்கைக்காகக் காத்திருப்பதாகவும், இது செப்டெம்பர் மாதமளவில் அறிமுகப்படுத்தப் பட உள்ளதாகவும் தெரிவித்தார்.
திறன்குறைந்த பணியாளர்களை வெளிநாடுகளிலிருஉந்து தருவிக்கும் இந்த தற்காலிக வெளிநாட்டுப் பணியாளர் திட்டத்தை, மறுசீரமைக்கப் போவதாக லிபரல் அரசு கூறியுள்ளது. ஆனால் இத்திட்டம் கனேடியர்களின் தொழில்வாய்ப்புக்களைப் பாதிப்பதாகவும், கனேடியர்களுக்கு வழங்கப்படும் ஊதியத்தின் அளவைக் குறைப்பதாகவும் உள்ளூர் தொழிற் சங்கங்கள் குறை கூறுகின்றன.
இவ்வாறு கனடாவரும் பணியாளர்கள் நிரந்தர வதிவிட அந்தஸ்தைப் பெற, தற்போது உள்ள நடைமுறை கடினமானதாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இது தொடர்பான விதிமுறைகளைத் தளர்த்துவது தொடர்பாக குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலம் அவர்களைக் கேட்டபோது, ” இப்பணியாளார்களுக்கு நிரந்தர வதிவிட அந்தஸ்தை வழங்க அரசு ஆவன செய்யும்” எனப் பதிலளித்தார்.