புதுடெல்லி: கனடாவில் காலிஸ்தான் தீவிரவாதிஹர்தீப் சிங் நிஜ்ஜார் கடந்த ஜூன்மாதம் மர்ம நபர்களால் கொல்லப்பட்டார். இதில் இந்தியாவுக்கு தொடர்பு இருப்பதாக கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ குற்றம் சாட்டினார். இதற்கு இந்திய அரசு மறுப்பு தெரிவித்துள்ளது.
இந்நிலையில், கனடாவில் வசிக்கும் லக்பீர் சிங் லண்டா (34) தீவிரவாதி என மத்திய உள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இது தொடர்பாக வெளியிட்ட அறிவிக்கையில், “மர்ம நபர்களால் கொல்லப்பட்ட ஹர்தீப் சிங் நிஜ்ஜார், சீக்கியர்களுக்கான நீதி அமைப்பின் தலைவர் குர்பத்வந்த் சிங் பன்னு, காலிஸ்தான் புலிப்படை உள்ளிட்ட காலிஸ்தான் ஆதரவு அமைப்புகளுடன் லண்டா தொடர்பு வைத்திருந்ததால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என கூறப்பட்டுள்ளது.
பப்பர் கல்சா இன்டர்நேஷனல் (பிகேஐ) என்ற காலிஸ்தான் ஆதரவு இயக்கத்தைச் சேர்ந்த லண்டா, பஞ்சாப் மாநிலம் டார்ன் டார்ன் மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஆவார்.