கனடாவில் குடிவரவாளர்களின் எண்ணிக்கையை 50 வீதத்தினால் அதிகரிப்பது இலகுவானதல்ல
கனடாவில் குடிவரவாளர்களின் எண்ணிக்கையை 50 வீதத்தினால் அதிகரிக்க வேண்டும் என்ற திட்டமானது அடைய கடினமான இலக்காகும் என கனேடிய குடிவரவு அமைச்சர் ஜோன் மக்கலம் தெரிவித்துள்ளார்.
கனடா குடிவரவு நிலைகளை குறிப்பிடத்தக்க அளவு அதிகரிக்க வேண்டும் என வெளி ஆலோசகர்களின் உயர்மட்ட குழு அறிவித்துள்ள நிலையிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், ஆலோசனை குழுவினால் வெளியிடப்பட்டுள்ள பொருளாதார வளர்ச்சி பற்றிய அறிக்கையில், குடிவரவு எண்ணிக்கையை 50 வீதத்தினால், அதாவது 4 இலட்சத்து 50 ஆயிரமாக அதிகரிக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இந்நடவடிக்கையானது, பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிக்கும் ஒரு முயற்சியாக திறமையான தொழில் முனைவோரை இலக்கு வைத்துள்ளது.
இந்நிலையில், இக்குழுவின் பரிந்துரையானது அதிக செலவீனமுடையது என்றும் இதனை நடைமுறைப்படுத்த பரந்தளவிலான தேசிய ஆதரவை பெறுவது கடினம் என்றும் குடிவரவு அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை, இது தொடர்பான கலந்தாலோசனைகள் தொடர்வதாகவும், 2017ஆம் ஆண்டிற்கான குடிவரவு இலக்குகளை அரசு விரைவில் அறிவிக்கும் எனவும் மக்கலம் மேலும் தெரிவித்தார்.