கனடாவில் இவர் தான் உண்மையான ஹீரோ
கனடா நாட்டில் உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இளம்பெண்ணை கத்தி முனையில் மிரட்டிய நபரை மாணவர் ஒருவர் துணிச்சலாக எதிர்த்து காப்பாற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பிரித்தானிய கொலம்பியா பல்கலைக்கழக வளாகத்தில் தான் இந்த துணிகர சம்பவம் நிகழ்ந்துள்ளது.
இந்த பல்கலைக்கழகத்தில் ஆடம் கேசி என்ற மாணவர் பொறியியல் படித்து வருகிறார். வளாகத்திலேயே உள்ள Salish House என்ற விடுதியில் இவர் தங்கி வந்துள்ளார்.
இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை காலை 11.30 மணியளவில் விடுதியில் இருந்து மாணவர்கள் அலறியடித்துக்கொண்டு வெளியேறியுள்ளனர்.
மாணவர்கள் ஓடுவதை கண்ட ஆடம் விடுதிக்குள் சென்று என்ன நடக்கிறது என பார்த்துள்ளார்.
அப்போது, இதே பல்கலைக்கழகத்தில் படிக்கும் மாணவன் ஒருவர் இளம்பெண் ஒருவரை மடக்கி பிடித்து அவரது கழுத்தில் கூர்மையான கத்தியை வைத்து மிரட்டிக்கொண்டு இருந்துள்ளார்.
இக்காட்சியை பார்த்து மிரண்டுப்போன மற்ற மாணவர்கள் இளம்பெண்ணை காப்பாற்ற முயற்சி செய்யவில்லை. கத்தி கூர்மையாக இருந்ததால் அவரது கழுத்தில் லேசான காயமும் ஏற்பட்டுருந்தது.
சற்றும் சிந்திக்காத ஆடம் புயல் வேகத்தில் செயல்பட்டு கத்தியை வைத்திருந்த நபரை கைகளை தட்டி விட்டு அவரது கழுத்தை சுற்றி வளைத்து மூச்சு விட முடியாமல் செய்துள்ளார்.
இந்த தாக்குதலை எதிர்க்கொள்ள முடியாத அந்த நபர் இளம்பெண்ணை விட்டுவிடுகிறார். பின்னர், சக மாணவர்களும் திரண்டு அந்த நபரை பொலிசாரிடம் ஒப்படைத்துள்ளனர்.
இது குறித்து ஆடம் பேசியபோது, ‘நான் நீண்ட மாதங்களாக கராத்தே பயிற்சி பெற்று வருகிறேன். இந்த கலை தான் தற்போது இளம்பெண்ணை காப்பாற்ற உதவியுள்ளது’ என பெருமையாக கூறியுள்ளார்.
கைது செய்யப்பட்ட நபர் சவுதி அரேபியாவை சேர்ந்தவர் என்றும், இளம்பெண்னை தாக்க முயன்ற குற்றத்திற்காக அவர் மீது கொலை முயற்சி வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
பல்கலைக்கழக வளாகத்தில் இளம்பெண்ணின் உயிரை காப்பாற்றிய ஆடமை பொலிசார் வெகுவாக பாராட்டியுள்ளனர்.