கனடாவின் இராஜதந்திர பணிகளுக்கான அலுவலகம் லாவோஸில் திறந்து வைப்பு
கனடாவின் இராஜதந்திர பணிகளுக்கான அலுவலகம் ஒன்று லாவோஸ் நாட்டின் தலைநகர் வியஞ்சியானில் திறந்து வைக்கப்பட்டுள்ளது. லாவோஸ் சென்றிருந்த கனேடிய வெளியுறவு அமைச்சர் ஸ்டீஃபான் டியோன் இந்த அலுவலகத்தினை உத்தியோகபூர்வமாக திறந்து வைத்துள்ளார்.
இது குறித்து கருத்து தெரிவித்த வெளியுறவு அமைச்சரின் பேச்சாளர், லாவோஸ் தலைநகரில் திறக்கப்பட்டுள்ள இந்த அலுவலகம், தூதரகம் என்ற நிலையினை இன்னமும் ஏற்படுத்திக் கொள்ளாத போதிலும், அரச இராஜதந்திர உறவுகளை மேற்கொள்வதற்கான அலுவலகமாக செயற்படும் எனக் கூறியுள்ளார்.
அத்துடன் லாவோஸிக்கான கனடாவின் தூதுவராக, அண்டை நாடான தாய்லாந்தில் உள்ள கனேடிய தூதுவரே செயற்படுவார் எனவும் அவர் தகவல் வெளியிட்டுள்ளார்.
தென்கிழக்காசிய வலையமைப்பான ஆசியானை உள்ளடக்கிய பிராந்தியமானது உலகில் மிக முக்கிய மையமாக உள்ளது எனவும், அங்கு பெருமளவான பொருளாதார வாய்ப்புகள் காணப்படுவதாவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த நிலையில் குறித்த அந்த பிராந்தியங்களில் தனது நிலையினை வலுப்படுத்த வேண்டியது கனடாவுக்கு அவசியம் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
லாவோஸில் திறந்து வைக்கப்பட்டுளது போன்றதான அலுவலகம் ஒன்று கம்போடியாவிலும் திறந்து வைக்கப்படவுள்ளதாகவும் அந்த வகையில் அனைத்து ஆசியான் நாடுகளிலும் கனடாவின் இராஜதந்திர பிரதிநிதித்துவம் ஏற்படுத்தப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு அமைச்சரின் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.