கனேடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அவர்கள், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை அறிவித்தமைக்கு ஆதரவு தெரிவித்தும், கனடாவின் நிலைப்பாட்டை கண்டித்த இலங்கை அரசுக்கு கண்டனம் தெரிவித்தும் ஒரு கூட்டம் கிளிநொச்சியில் நடந்தது. இதில் இனப்படுகொலை குறித்தும், பன்னாட்டு குற்றங்கள் குறித்தும், கனடா நாட்டின் இனப்படுகொலைத் தீர்மானம் குறித்தும், சிறீலங்கா அரசின் இனப்படுகொலை குறித்தும் மக்கள் மத்தியில் சிறந்த உரையாடல்கள் முன்னெடுக்கப்பட்டன. இனப்படுகொலையால் பாதிக்கப்பட்ட ஒரு தேசத்தில் இனப்படுகொலையின் நீதிக்காக காத்திருக்கும் ஒரு நிலத்தில் இதுபோன்ற நிகழ்வுகளை பரவலாக செய்ய வேண்டும். ஏனென்றால் நமக்கு நடந்தது இனப்படுகொலை என்பதை முதலில் நாம் அறிந்து கொள்வது தான் இங்கே முக்கியமானதாக இருக்கிறது.
2009 ஆம் ஆண்டு போர் நடந்த சமயத்தில் மாத்திரமல்ல, அதற்கு முந்தைய ஆண்டுகளிலேயே ஈழத்தில் இனப்படுகொலை நடக்கிறது என்றும், பாரிய இனப்படுகொலைக்கு திட்டங்களை இலங்கை அரசு தீட்டுகிறது என்றும், விடுதலைப் புலிகளின் ஊடகங்கள் பல ஆதாரங்களையும், எதிர்வு கூறல்களையும் செய்திருந்தது. அதுவே முள்ளிவாய்க்கால் இனப்படுகொலையாக நடந்தது. 2009 மே 18இற்குப் பிறகு, இனப்படுகொலை குறித்தும், அதற்கான நீதி குறித்தும் எழுதியும், பேசியும் வந்தவர்களை நம்மில் பலரே கேலியாக பார்த்த நிகழ்வுகளும் நடந்தன. இலங்கை அரசு போரில் வென்றுவிட்டது என்றும், இனிமேல் தமிழ் தேசியம் பேசாமல், சிறீலங்காவில் பன்மைத்துவத்தை ஏற்று தனிநாடு கோராமல், சிங்களவர்களுடன் இணைந்து வாழ வேண்டும் என்றும் விடுதலைப் புலிகளை அண்டி வாழ்ந்தவர்கள், அரசுடன் அண்டி வாழ்ந்தபடி கூறினார்கள்.
ஈழத்தில் நடந்தது இனப்படுகொலை என்பதை கூட்டாகவும், அழுத்தமாகவும் சொல்வதும், எழுதுவதும், பேசுவதும் கூட சிறீலங்கா அரசால் திட்டமிட்டு தடுக்கப்பட்ட அதே நேரத்தில் அதனை பல்வேறு மட்டங்களில் குழப்பியவர்களும் உண்டு. உதாரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் திரு சுமந்திரன் அவர்கள், இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், ஆதாரங்கள் இல்லை என்றும் கூறியதை நினைவுபடுத்துல் பொருத்தமாக இருக்கும். அதேவேளை சுமந்திரன் தமிழ்த் தேசத்திற்கும், விடுதலைப் போராட்டத்திற்கும் எதிரானவர் என்பதால் அவர் எடுக்கும் நிலைப்பாடு பிழை என்பதை உணர்ந்தும் இனப்படுகொலையை ஆதரிக்கவும் வலுப்படுத்தவும் பலர் துணிந்தனர்.
இப்படியான சூழல்கள் இனப்படுகொலையை செய்த சிறீலங்கா அரசுக்கு பெரும் ஆதரவை வலுப்படுத்தியது. இனப்படுகொலையின் குற்றவாளிகள் தாம் தப்பித்துக் கொண்டோம் என்று மகிழ்ந்து கொண்டனர். ஈழத்தைப் பொறுத்தவரையில், முழுக்க முழுக்க இராணுவத்தால் ஆக்கிரமிக்கப்பட்டும், அடக்கப்பட்டும் இருந்தது. தனிநாடு கோரி மீண்டும் ஈழ மக்கள் போராடக்கூடாது என்பது இந்த ஆக்கிரமிப்பு மற்றும் அடக்குமுறையின் ஒரு நோக்கம் என்பதுடன் நடந்த இனப்படுகொலைக்கான நீதி குறித்தும் மக்கள் போராடக் கூடாது என்பது இன்னொரு மறைநோக்கமாகும்.
ஈழ இனப்படுகொலையில் கனடா ஏற்டுத்திய தீர்மானம் குறித்து அண்மையில் இந்து நாளிதழில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தேன். தமிழ் நாட்டின் அரசியல் பிரமுகர்கள் முதல் படைப்பாளிகள், கலைஞர்கள் வரை தொடர்பு கொண்டு பாராட்டி இருந்தார்கள். பல உறவுகள் மின்னஞ்சலில் கடிதம் எழுதியும் இருந்தனர். குறித்த கட்டுரையில் தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் மாண்புமிகு ஜெயலலிதா ஜெயராம் அவர்கள் இலங்கையில் நடந்தது இனப்படுகொலை என்ற தீர்மானத்தை தமிழ்நாடு சட்டமன்றத்தில் நிறைவேற்றியமையே இன்று கனடா தீர்மானத்தின் வெற்றிக்கு ஒரு படியாக இருந்தது என்பதையும் பதிவு செய்திருந்தேன்.
தமிழ்நாட்டு மத்தியிலும், புலம்பெயர் தேசத்திலும் அதிகம் வாசிக்கப்படும் உரிமை மின்னிதழ் வழியாக மற்றொரு கருத்தையும் பதிவு செய்வதும் இக் கட்டுரையாளரின் மிகுந்த பொறுப்பாகும். 2009 இற்குப் பிறகு, கிட்டத்தட்ட 2015 வரையான காலம் வரையிலும் ஈழத்தின் குரல் மிகவும் அடக்கி ஒடுக்கப்பட்டது. ஈழ மக்களே நம்பிக்கை இழந்த அக் காலகட்டத்தில் தமிழ்நாடும், புலம்பெயர் தேசமும் இலங்கையில் நடந்த இனப்படுகொலை குறித்து குரல் எழுப்பி வந்தனர். தமிழ் நாட்டின் அரசியல் தலைவர்கள் பலரும் வேறுபாடின்றி ஈழ இனப்படுகொலைக்காக குரல் கொடுத்து பல்வேறு போராட்டங்களை பல்வேறு வழிமுறைகளில் முன்னெடுத்தார்கள். தமிழ்நாட்டு மாணவர்களும் இதில் அளப்பெரிய போராட்டங்களை செய்தார்கள்.
இதனால் தான் அன்றைய முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இனப்படுகொலைத் தீர்மானத்தை நிறைவேற்றி வரலாற்றுச் சிறப்பு மிக்க முதல் அடியை தொடக்கினார். இந்த தீர்மானத்தால் வரலாற்றில் உங்கள் பெயர் பொறிக்கப்படும் என்று அன்றைக்கு மதிப்புமிக வைகோ அவர்கள் பதிவு செய்தார். தமிழ் நாட்டின் ஈழத்தை நோக்கிய ஆதரவுக் குரலாகவும், உலகை நோக்கிய இனப்படுகொலைக்கு எதிரான சீற்றமாகவும், தமிழ் நாட்டின் சட்டமன்றத்தில் அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களின் ஏக ஆதரவுடன் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலைத் தீர்மானம் அமைந்திருந்தது.
இதேவேளை ராஜபக்ச, சரத்பொன்சேகா போன்ற இனப்படுகொலையாளிகள் அன்றைக்கு தமிழக தலைவர்களை எள்ளி நகையாடினார்கள். சிங்கள ஊடகங்கள் கேவலமான ஊடகப் பதிவுகளை வெளியிட்டு தமிழக முதல்வரரையும், தலைவர்களையும் அசிங்கப்படுத்தியது. ஆனால் அதனை கண்டெல்லாம் தளராமல் தமிழ்நாட்டுத் தலைவர்கள் இன்று வரையில் ஈழ இனப்படுகொலைக்காக குரல் கொடுக்கிறார்கள். ஜெயலலிதா அம்மையாளருக்குப் பிறகு வந்த முதல்வர்களும் அப் பணியை தொடர்கிறார்கள். தமிழ் நாட்டிலும், புலம்பெயர் தேசத்திலும் ஈழ இனப்படுகொலைக்கான நீதி குறித்து எழுப்பட்ட குரல்கள் கூட்டு ஆயுதமாக மாறியிருந்தன. கனடாவில் இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் அரசு பிரகடனமாக அறிவிக்கப்பட்டது போன்று தமிழ்நாடு சட்டமன்றதின் அரச அறிவிப்பாக இனப்படுகொலை நினைவேந்தல் வாரம் அறிவிக்கப்பட வேண்டும். அதனைச் செய்து இன்றைய தமிழக முதல்வர் மு க ஸ்டாலின் அவர்கள் இவ் வரலாற்று பணியில் பங்கு கொள்ள வேண்டும். அதேபோன்று இந்திய அரசு இனப்படுகொலைத் தீர்மானத்தை எடுக்க தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்கள் வலியுறுத்த வேண்டும்.
இலங்கையில் வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட இனப்படுகொலை குறித்த தீர்மானமும் இதில் குறிப்பிடத்தக்க பங்கை வகின்றது. இந்த தீர்மானத்தை திரு சிவாஜிலிங்கம் முன்மொழிந்த போது சுமந்திரனைப் போன்றவர்கள் அதற்கு எதிராய் நடந்து கொண்டார்கள். சிவாஜிலிங்கத்தை கேலி செய்தவர்களும் உண்டு. அத்துடன் கனடா நாட்டில் தமிழ் மக்களின் அரசியல் பிரதிநிதிகளாய் உள்ள ஹரி ஆனந்தசங்கரி, விஜய் தணிகாசலம், லோகன் கணபதி போன்றவர்களின் அயராத உழைப்பும், முயற்சியும், பணியும் இங்கே கவனத்தில் கொள்ள வேண்டிய மாண்புகளாகும். இலங்கையில் பல பாராளுமன்ற உறுப்பினர்கள் உள்ள போதும் ஒரு சிலரைத் தவிர பெரும்பாலானவர்கள் இனப்படுகொலை குறித்து வலியுறுத்தாமல் மௌனம் காத்து வந்தனர்.
தூரத்து தண்ணி ஆபத்துக்கு உதவாது என்று கிளிநொச்சியை சேர்ந்த ஒரு அரச ஆதரவுக் கவிஞர் கட்டுரை எழுதியதும் நினைவுக்கு வருகிறது. இன்றைக்கு உலக அரங்கில் ஈழ இனப்படுகொலைக்காக கனடா வெளியிட்ட குரல் பெரும் கவனத்தைப் பெற்றிருக்கிறது. இன்னும் பல நாடுகளின் மனசாட்சியைத் தட்டும் நம்பிக்கை குரலாக ஒளிக் கீற்றாக கனடாவின் பிரதமர் ஜஸ்டின் ட்டோவின் குரல் மாறியிருக்கிறது. இப்பெரும் படுகொலைக்கு இன்னமும் நீதி கிடைக்கவில்லையே என்ற வேதனை தாளாமல் அழுது உருகித் துடித்த மக்களின் மத்தியில் முள்ளிவாய்க்காலில் இம்முறை நின்று கொண்டிருந்தேன். அப்படி வேதனையில் துடிக்கும் எம் ஈழ மக்களுக்கு ஆதரவு தந்தது கனடாவின் குரல். இதனை உலக நாடுகள் அனைத்தும் எடுத்து ஈழ நிலத்தில் விடியலையும், விடுதலையையும் ஏற்படுத்தும் காலம் வெகுதூரத்தில் இல்லை.
நன்றி -உரிமை