கத்தார் தலைநகர் தோகாவில் இனி ஆவின் பால் விற்பனைக்கு வரவுள்ளது.
தமிழக அரசின் கூட்டுறவு நிறுவனமான ஆவின் உற்பத்தி செய்யும் பால் பொருட்கள் இனி கத்தார் தலைநகர் தோகாவில் விற்பனை செய்யப்படவுள்ளது. இதற்கான அறிவிப்பை தமிழக பால்வளத்துறை அமைச்சர் ராஜேந்திர பாலாஜி வெளியிட்டுள்ளார். முன்பு, சிங்கப்பூர், ஹாங் காங் ஆகிய இடங்களுக்கு ஆவின் பால் ஏற்றுமதி செய்யப்பட்டு வந்தது. தற்போது கத்தாரிலும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஒரு லிட்டர் பால் பாக்கெட்டுகள் மற்றும் ஒரு லிட்டருக்கும் குறைவான அளவில் பால் பாக்கெட்டுகள் என மொத்தம் 15,000 லிட்டர் பால் கத்தாருக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இத்துடன் நெய் மற்றும் சுவையூட்டப்பட்ட பால் ஆகிய பொருட்களும் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளன.
இதுபற்றி ஆவின் நிறுவனத்தின் நிர்வாக இயக்குநரான சி.காமராஜ் டைம்ஸ் ஆஃப் இந்தியா ஊடகத்திடம் பேசுகையில், “நெய்யுடன் 15,000 லிட்டர் பால் பொருட்களை கொண்ட கண்டய்னரை தோகாவுக்கு அனுப்பியுள்ளோம். ஒவ்வொரு மாதமும் இதுபோல மூன்று முதல் ஐந்து கண்டய்னர்களை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இதுவரை சிங்கப்பூருக்கு 2.4 லட்சம் லிட்டர் பாலும், ஹாங் காங்கிற்கு 10,000 லிட்டர் பாலும் அனுப்பப்பட்டுள்ளது. சென்னையிலிருந்து பால் சூடுபடுத்தப்பட்டு பாக்கெட்டுகளில் அடைக்கப்பட்டு அனுப்பப்படுகிறது. நெய் ஏற்றுமதி செய்வதற்கு அண்மையில் ஆவினுக்கு சுங்கத் துறை ஒப்புதல் அளித்தது. இதையடுத்து குவைத் போன்ற வளைகுடா நாடுகளுக்கு நெய் சரக்குகளை அனுப்ப திட்டமிட்டுள்ளோம். இந்நாடுகளில் நெய்யிற்கு தேவை அதிகமாக உள்ளது” என்று தெரிவித்தார்.