கண்டி மாவட்டத்தில் முஸ்லிம்களுக்கு எதிராக வன்முறைகள் கட்டவிழ்த்து விடப்பட்ட நிலையில், அக்குறணை 4ஆம் கட்டை பள்ளிவாசலில் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் அமைச்சர் ரவூப் ஹக்கீம் தலைமையில் விசேட கலந்துரையாடலொன்று நடைபெற்றது.
இதில் பள்ளி நிர்வாகிகள், ஊர் மக்கள், சிவில் சமூக பிரதிநிதிகள் என பலரும் கலந்துகொண்டு தற்போதைய பிரச்சினை தொடர்பாக ஆராய்ந்தனர். அக்குறணை 9ஆம் கட்டையில் பள்ளிவாசல் தாக்கப்பட்டதாக வதந்தியொன்று பரவிய நிலையில், அமைச்சர் ரவூப் ஹக்கீம் நள்ளிரவு நேரத்தில் அக்குறணை முழுவதும் நேரில் சென்று பார்வையிட்டார். எனினும், எவ்வித அசம்பாவிதங்களும் நடைபெறாத நிலையில் அக்குறணையில் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கட்டுகஸ்தோட்டையில் பள்ளிவாசல் ஒன்றுக்கு தாக்குதல் நடத்தப்பட்டது. இதனால், இரண்டாவது தடவையாக அப்பகுதிக்கு சென்ற அமைச்சர் ரவூப் ஹக்கீம், பள்ளிவாசலை சுற்றி பொலிஸ் பாதுகாப்பை மேலும் பலப்படுத்தியுள்ளதுடன், இராணுவத்தினரும் அப்பகுதியில் கடமையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கதாகும்.