கணினியில், தமிழ் எழுத்துருக்கள் மற்றும் மாற்றிகளை உருவாக்கி தந்தவர்களில் ஒருவரான, தர்மபுரியை சேர்ந்த கோபி, மாரடைப்பால் உயிரிழந்துள்ளார்.
42 வயதுடைய தகடூர் கோபி தர்மபுரி, குமாரசாமிபேட்டையைச் சேர்ந்தவர். கணினி பொறியியல் பட்டம் படித்தவர். சிங்கப்பூர், சென்னை, ஐதராபாத் உள்ளிட்ட பகுதிகளில், மென்பொருள் துறையில் பணியாற்றினார்.
இணைய உலகில், அதியமான் கோபி, தகடூர் கோபி, ஹைகோபி போன்ற பெயர்களில், தளங்களை உருவாக்கி, அதியமான் மாற்றி, தகடூர் தமிழ் மாற்றி ஆகிய எழுத்துரு மாற்றிகளை வெளியிட்டுள்ளார்.
தமிழ் மட்டுமல்லாது, மலையாளம், தெலுங்கு, கன்னடம் உள்ளிட்ட தென் மாநில மொழிகளிலும் எழுத்துரு மாற்றிகளை உருவாக்கிஉள்ளார்.கடந்த, 26ம் திகதி மாரடைப்பால், ஐதராபாதில் இறந்தார்.
அவரது உடல், தர்மபுரியில் உள்ள, அவரது வீட்டுக்கு கொண்டு வரப்பட்டு நேற்று இறுதி சடங்குகள் நடந்து, அடக்கம் செய்யப்பட்டது. தமிழ் ஆர்வலர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் அஞ்சலி செலுத்தினர்.