நாளைய தினம் பயணக் கட்டுப்பாடுகளை தளர்த்த வேண்டாம் என இலங்கை மருத்து சங்கம் கோரிக்கை விடுத்துள்ளது.
சங்கத்தின் தலைவர், வைத்தியர் பத்மா குணரத்னவின் கையொப்பத்துடன், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஸவுக்கு அனுப்பிவைத்துள்ள கடிதத்திலேயே, இந்த விடயம் வலியுறுத்தப்பட்டுள்ளது.
குறுகிய நாட்களுக்கேனும் கட்டுப்பாடுகளை தளர்த்துவதின் ஊடாக, மீண்டும் தொற்றுப் பரவல் அதிகரிக்கக் கூடும் என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
அத்துடன், 21 ஆம் திகதி பயணக் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டால், கடந்த ஏப்ரல் மாதத்தில், ஏற்பட்ட அதிக பரவல் மீண்டும் ஏற்படக் கூடும் என இலங்கை மருத்துவ சங்கம் குறிப்பிட்டுள்ளது.
பயணக்கட்டுப்பாடுகளை குறைந்த பட்சம் எதிர்வரும் 28 ஆம் திகதி வரையிலேனும் நீடிக்க வேண்டும் என, தாம் கடந்த 11 ஆம் திகதி ஜனாதிபதிக்கு கடிதம் மூலம் அறிவித்திருந்ததாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இந்த நிலையில், 21 ஆம் திகதி கட்டுப்பாடுகளை தளர்த்துவது குறித்து தாம் மிகுந்த கவலையடைவதாக இலங்கை மருத்துவ சங்கத்தினர் குறிப்பிட்டுள்ளனர்.
அத்துடன், நாட்டில் தற்போதை நிலையில், நாளாந்தம் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட தொற்றாளர்கள் அடையாளங் காணப்படுவதோடு, 50 இற்கும் மேற்பட்ட உயிரிழப்புகள் பதிவு செய்யப்படுவதாக அவர்கள் தெரிவிக்கின்றனர்.
இதற்கிடையே, இந்தியாவின் டெல்டா வகை கொரோனா தொற்றும் பரவி வருவதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இதன்படி, கட்டுப்பாடுகளை தளர்த்துவதின் ஊடாக , மக்களின் நடமாட்டம் அதிகரித்து, புதிய வகை தொற்று மேலும் பரவலடையக் கூடும் என இலங்கை மருத்துவ சங்கம் மேலும் குறிப்பிட்டுள்ளது.