ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன மற்றும் கட்டார் அமீர் தமீன் பின் அஹமட் அல் தானி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு நேற்று இடம்பெற்றது.
கட்டார் எமீர் திவான் மாளிகைக்கு விஜயம் செய்த ஜனாதிபதிக்கு இராணுவ அணிவகுப்பு மரியாதையுடன் மகத்தான வரவேற்பளிக்கப்பட்டதாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
இதன் பின்னர் அரச தலைவர்களுக்கு இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகள் இடம்பெற்றதுடன், ஸ்ரீலங்கன் விமான சேவையுடன் பங்காளராகுவதற்கு ஜனாதிபதியினால் விடுக்கப்பட்ட வேண்டுகோள் தொடர்பில் கட்டார் ஆட்சியாளரால் விஷேட கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கையின் துறைமுகங்கள் மற்றும் உட்கட்டமைப்பு வசதிகளின் அபிவிருத்திக்கு உதவி வழங்க கட்டார் இணக்கம் தெரிவித்ததாக ஜனாதிபதி ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.
புதுப்பிக்கத்தக்க சக்தி மற்றும் வாயு மின்னுற்பத்தி துறையில் காணப்படும் முதலீட்டு சந்தர்ப்பங்கள் தொடர்பாக இதன்போது ஜனாதிபதி விளக்கமளித்ததுடன், இலங்கையில் இயற்கை வாயு மின்நிலையம் அமைப்பதற்கு முதலீடு செய்யவும் கட்டார் ஆட்சியாளர் இணக்கம் தெரிவித்துள்ள அதே வேளை இரு நாடுகளுக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகள், மின்சக்தி, நீர் முகாமைத்துவம், சுகாதாரம் மற்றும் நிதி துறைகளில் காணப்படும் தொடர்புகளை மேம்படுத்தத்தக்க 07 புதிய உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது