2 மில்லியன் வெளி நாட்டுத் தொழிலாளர்களைப் பாதுகாப்பதற்கான புதிய சட்ட மூலமொன்றுக்கு கட்டார் அரசாங்கம் அங்கீகாரமளித்துள்ளது.
கட்டாரிலுள்ள வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கு நிதி ஆதரவை வழங்கும் மேற்படி சட்டமூலமானது அங்கு பணியாற்றும் தொழிலாளர்கள் உரிய வேதனத்தைப் பெற்றுக் கொள்வதை உறுதிப்படுத்தும் என தெரிவிக்கப்படுகின்றது.
அந்நாட்டு தொழில் அமைச்சர் இஸ்ஸா அல் நுவா யிமி இதனை தெரிவித்தார்.
‘தொழிலாளர்கள் ஆதரவு மற்றும் காப்புறுதி நிதி’ என அழைக்கப்படும் மேற்படி நிதியமானது அமைச்சரவையின் ஆதரவின் கீழ் சுயாதீனமாக செயற்படவுள்ளதாக அவர் கூறினார்.
வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தமது வாழ்க்கைச் செலவினங்களுக்கு ஏற்ப ஊதியத்தைப் பெறுவதை உறுதிப்படுத்தும் முகமாக அவர்களுக்கான ஆகக்குறைந்த ஊதிய அளவு உட்பட புதிய நடைமுறைகள் கட்டார் அமைச்சரவையால் நேற்று முன்தினம் இடம்பெற்ற கூட்டத்தில் அங்கீகரிக்கப்பட்டுள்ளது.
கட்டாரில் வெளிநாட்டுத் தொழிலாளர்களுக்கான ஆகக் குறைந்த ஊதிய அளவு நிர்ணயிக்கப்படுவது இதுவே முதல் தடவையாகும்.
கட்டாரின் இந்த நகர்வுக்கு சர்வதேச வாணிப ஒன்றிய கூட்டமைப்பு வரவேற்பளித்துள்ளது.
இந்நிலையில் கட்டார் தனது ஊழியப் படையில் அதிகளவானோருக்கு பங்களிப்புச் செய்த நாடுகளுடன் 36 பரஸ்பர உடன்படிக்கைகளில் கைச்சாத்திட்டுள்ளது.
கட்டார் தொழில் அமைச்சருக்கும் அந்நாட்டிலுள்ள தூதரகத் தலைவர்களுக்குமிடையே இடம்பெற்ற சந்திப்பையடுத்து மேற்படி உடன்படிக்கைகள் கைச்சாத்திடப்பட்டுள்ளன.
இந்த உடன்படிக்கைகளானது ஐக்கிய நாடுகள் முகவர் நிலையங்களிலொன்றான சர்வதேச தொழிலாளர்கள் அமைப்பின் கூட்டமொன்று இடம்பெறுவதற்கு முதல்நாள் கைச்சாத்திடப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது. மேற்படி தொழிலாளர் அமைப்பு கட்டாரில் குடியேற்றத் தொழிலாளர்கள் துஷ்பிரயோகத்துக்கு உட்பட்டு வருவதை முடிவுக்கு கொண்டு வருமாறு அந்நாட்டை எச்சரித்திருந்தது.
எதிர்வரும் நவம்பர் மாதக் காலக்கெடுவுக்குள் கட்டார் குடியேற்றத் தொழிலாளர்கள் தொடர்பில் முன்னேற்ற நிலையைக் காண்பிக்க வேண்டும் எனவும் துஷ்பிரயோகங்கள் குறித்து உத்தியோகபூர்வ விசாரணைகள் முன்னெடுக்கப்பட வேண்டும் எனவும் அந்த அமைப்பு வலியுறுத்தியிருந்தது.
கட்டார் நீண்டகாலமாக வெளிநாட்டுத் தொழிலாளர்கள் தமது தொழில்களில் மாற்றத்தைக் கொண்டு வருவதற்கும் நாட்டை விட்டு வெளியேறுவதற்கும் அவர்களது தொழில்தருநரின் அனுமதியைப் பெற வலியுறுத்தும் ‘கபலா’என்ற கடுமையான தொழில் ஏற்பாதரவு முறைமையை செயற்படுத்தி வந்திருந்தது. இந்நிலையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் கபலா முறைமை முடிவுக்கு கொண்டு வரப்படுவதாக அந்நாட்டு அதிகாரிகள் அறிவித்திருந்தனர்.
இன அடிப்படையில் அல்லாது அனைத்து தொழிலாளர்களுக்கும் ஆகக் குறைந்த ஊதிய நிர்ணயம், தொழிலாளர்கள் கட்டாரை விட்டு செல்வதை தொழில்தருநர்கள் இனிமேலும் தடுக்க முடியாத நிலை, தொழிலாளர்களுக்கான ஆளடையாள ஆவணங்கள் அவர்களை பணிக்கு அமர்த்தும் வர்த்தக நிறுவனங்களால் அல்லது அரசாங்கத்தால் வழங்கப்படல், மத்திய அதிகார சபை தொழில் ஒப்பந்தங்கள் குறித்து கவனம் செலுத்தி மோசமான நிபந்தனைகளை தடுக்க நடவடிக்கை எடுத்தல், பணியிடங்களில் ஊழிய சபைகளை ஸ்தாபித்து முறைப்பாடுகள் தொடர்பில் தீர்வு காணல் என்பனவற்றை உள்ளடக்கிய சீர்திருத்தங்கள் குறித்து கட்டார் அமைச்சரவைக் கூட்டத்தில் இணக்கம் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
கட்டாரில் எதிர்வரும் 2022 ஆம் ஆண்டு இடம்பெறவுள்ள உலகக் கிண்ண கால்பந்தாட்டப் போட்டிகளையொட்டி அங்கு பணியாற்றும் குடியேற்றத் தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்க அந்நாட்டுக்கு சர்வதேச ரீதியில் கடும் அழுத்தம் கொடுக்கப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.