விஜய் சங்கருக்கு நேற்றிரவு தூக்கமே வந்திருக்காது. ட்விட்டர் நோட்டிஃபிகேஷன் முழுவதும் கெட்ட வார்த்தைகளால் நிரம்பி வழிந்திருக்கும். விஜய் ஹஸாரே டிராபிக்கும், நிடாஹஸ் டிராபிக்கும் இடையிலான வித்தியாசம் புரிந்திருக்கும். அனுபவத்துக்கும் இளமைக்குமான இடைவெளி விளங்கியிருக்கும். பதற்றம் எப்படியெல்லாம் படுத்தி எடுக்கும் என்பது தெரிந்திருக்கும். முஸ்டஃபிசுர் ரஹ்மான் வீசிய 18-வது ஓவரின் அந்த ஐந்து பந்துகள் திரும்பத் திரும்ப மனத்திரையில் வந்து போயிருக்கும். #INDvBAN
`பேக் ஆஃப் எ லென்த்தில் அவுட் சைட் தி ஆஃப் ஸ்டம்புக்கு வெளியே வந்த முதல் பந்தில் ரன் எடுக்க முடியாமல் போனபோதே சுதாரித்திருக்க வேண்டும். குட் லென்த்தில் அதே திசையில் வந்த அடுத்த பந்தை கவர் திசையில் ஒரு Punch அடிக்க நினைத்ததை, முஸ்டஃபிசுர் ஆஃப் கட்டரால் வெல்வார் என நினைத்துப் பார்க்கவேயில்லை. வெற்றிக்கு 18 பந்துகளில் 35 ரன்கள் தேவை என்ற சூழலில் பதற்றம் இருக்கத்தான் செய்யும். அந்தப் பதற்றத்தை எதிர் முனையில் இருந்த மணீஷ் பாண்டே தலையில் திணித்திருக்கலாம். இப்போது நினைத்து பிரயோஜனமில்லை.
மூன்றாவது பந்தை அம்பயர் வைடு கொடுத்திருந்தால், கொஞ்சம் ஆசுவாசம் கிடைத்திருக்கும். நான்காவது பந்தையும் அதே லைனில், அதே லென்த்தில் வீசுவார் என எதிர்பார்க்கவில்லை. முஸ்டஃபிசுர் அற்புதமான பெளலர். அப்படியெல்லாம் சொல்லி தப்பிக்க முடியாது. ச்சே… முக்கியமான கட்டத்தில் ஒரு ரன் கூட எடுக்கவில்லை. ரன் எடுக்கவில்லை என்பதை விட, பந்தை பேட்டால் தொடவே இல்லை. இதற்கு மணீஷ் பாண்டே போல தூக்கிக் கொடுத்து அவுட்டாகியிருக்கலாம். ஒருவேளை ஸ்டம்ப்பிலிருந்து ஆஃப் சைடு நகராமல் இருந்திருக்கலாம். நகர்ந்து நின்றதுதான் பிரச்னை. அதுமட்டுமா பிரச்னை?
முஸ்டஃபிசுர் என் மனநிலையை நன்கு புரிந்து கொண்டார். இந்த மாதிரி தருணத்தில் பெளலரின் மனதை நான் படித்திருக்க வேண்டும். ஒருவேளை தினேஷ் கார்த்திக் மட்டும் அடித்துக் கொடுக்கவில்லை எனில், தோற்றிருப்போம். மொத்த பழியும் நம் மீது விழுந்திருக்கும். இப்ப மட்டும் என்னவாம். இந்தக் கறை எளிதில் போகாது. இந்நேரம் லிமிட்டெட் ஓவர் போட்டிகளுக்கு லாயக்கில்லை என முடிவு கட்டியிருப்பார்களோ?! வாஷி நிரூபித்துவிட்டான். டிகே அண்ணன் கம்பேக் கொடுத்துவிட்டார். நான்தான்…!’ – கேள்விகளும் பதில்களும் மாறிமாறி எழுந்து விஜய் சங்கரைக் குழப்பி எடுத்திருக்கும். இதிலிருந்து மீள அவருக்கு நாளாகும்.
ரொம்ப நாள் கழித்து தினேஷ் கார்த்திக் நேற்றிரவு நிம்மதியாகத் தூங்கியிருப்பார். மீடியா, சோசியல் மீடியா எங்கு திரும்பினாலும் அவர் புராணம்தான். எட்டு பந்துகளில் 29 ரன்கள்… கடைசி பந்தில் சிக்ஸர் அடித்து வெற்றி… வாட்டே இன்னிங்ஸ்… சச்சின் டெண்டுல்கரில் இருந்து சாமானிய கிரிக்கெட் ரசிகன் வரை அனைவரும் பாராட்டுகிறார்கள். வேறென்ன வேண்டும். இத்தனை ஆண்டு கால சர்வதேச கிரிக்கெட்டில் இதற்கு முன் அவருக்கு இப்படியொரு புகழ் கிடைத்ததில்லை. `எல்லாமே பெர்ஃபெக்ட் கிரிக்கெட் ஷாட்… அதிலும் கடைசியாக அடித்த அந்த ஃபிளாட் சிக்ஸர்…. இன்கிரிடிபிள்’ – என்கிறார் கவாஸ்கர்.
கவாஸ்கர் சொல்வதுபோல எல்லாமே பெர்ஃபெக்ட் ஷாட்கள். டிகே களமிறங்கும்போது இந்தியாவின் வெற்றிக்கு 12 பந்துகளில் 34 ரன்கள் தேவை. அதற்கு முந்தைய ஓவரில்தான் முஸ்டஃபிசுர் இந்த டோர்னமென்ட்டின் சிறந்த ஓவரை வீசிச் சென்றிருக்கிறார். 19-வது ஓவரை வீசும் ருபெல் ஹுசைனுக்கும் அந்தப் பெயரை வாங்கிக் கொடுக்கக் கூடாது என்பதில் தினேஷ் கார்த்திக் கவனமாக இருந்தார். இனி ஒவ்வொரு பந்தும் முக்கியம். எடுத்த எடுப்பிலேயே டாப் கியரில் பயணிக்க வேண்டும். முதல் பந்து புல் டாஸ். இதை விட வேற வாய்ப்பு கிடைக்காது. டிகே அதை அப்படியே லாங் ஆனில் சிக்ஸர் பறக்க விட்டார். நம்பிக்கை பிறந்தது. இந்தியாவுக்கும், அவருக்கும்… டென்ஷன் இப்போது வங்கதேசம் வசம்.