கென்யாவின் நைரோபியல் நடைபெற்றுவரும் 20 வயதுக்குட்பட்ட உலக மெய்வல்லுநர் சம்பியன்ஷிப்பில் பெண்களுக்கான 100 மீற்றர் அரை இறுதிப் போட்டியில் பங்குபற்ற இலங்கை வீராங்கனை மேத்தானி ஜயமான்ன தகுதிபெற்றார்.
இதற்கு முன்னோடியாக நடைபெற்ற 6ஆவது தகுதிகாண் போட்டியில் பங்குபற்றிய மேத்தானி 100 மீற்றர் ஓட்டத்தை 12.01 செக்கன்களில் நிறைவு செய்து 5ஆவது இடத்தைப் பெற்றார்.
எனினும் இன்று நடைபெற்ற 5 தகுதிகாண் சுற்றுகளில் பதிவான ஒட்டுமொத்த நேரப் பெறுதியின் அடிப்படையில் 24ஆவதும் கடைசியுமான இடத்தைப் பெற்ற அரை இறுதிக்கு முன்னேறினார்.
அவரது சிறந்த நேரப் பெறுதியான 11.85 செக்கன்களை விட இன்றைய போட்டியில் அவர் பதிவு செய்த நேரப் பெறுதி சற்று மோசமானதாகும்.
இலங்கை நேரப்படி இன்று மாலை 6.40 மணிக்கு நடைபெறவுள்ள 3 அரை இறுதிகளில் ஒட்டுமொத்த நிலையில் 8 இடங்களுக்குள் இடம்பெற்றால் மாத்திரமே மேதானி இறுதிப் போட்டியில் பங்குபற்றத் தகுதிபெறுவார்.
இன்று நடைபெற்ற 5 தகுதிகாண் சுற்றுகளில் நமீபியாவைச் செர்ந்த பியட்ரிஸ் மாசிலிங்கி 11.20 செக்கன்கள் என்ற நேரப் பெறுதியைப் பதிவு செய்து தனது நாட்டுக்கான 20 வயதுக்குட்பட்ட தேசிய சாதனையை நிலைநாட்டி ஒட்டுமொத்த நிலையில் முதலாம் இடத்தைப் பெற்றார்.
மேத்தானி பங்குபற்றிய 3ஆவது தகுதிகாண் போட்டியில் ஜெமெய்க்காவின் டீனா க்ளெட்டன் (11.50 செக்) 1ஆம் இடத்தையும் செக் குடியரசின் ஈவா கியூபிக்கோவா (11.75 செக்) 2ஆம் இடத்தையும் ஸ்லோவேக்கியாவின் விக்டோரியா போர்ஸ்டர் (11.75) 3ஆம் இடத்தையும் இத்தாலியின் காயா பேர்ட்டெல்லோ (11.86 செக்.) 4ஆம் இடத்தையும் கனடாவின் இஸபெல்லா கூட்ரொஸ் (11.91 செக்.) 5ஆம் இடத்தையும் பெற்றனர்.