மும்பை இண்டியன்ஸுக்கும் பஞ்சாப் கிங்ஸுக்கும் இடையில் கடைசிக் கட்ட ஓவர்களில் குவிக்கப்பட்ட ஓட்டங்கள் தீர்மானித்த இண்டியன் பிறீமியர் லீக் கிரிக்கெட் போட்டியில் பஞ்சாப் கிங்ஸ் 13 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
அத்துடன், மும்பை இண்டியன்ஸ் துடுப்பாட்ட வீரர் சூரியகுமார் யாதவ்வின் ஆற்றலை பஞ்சாப் கிங்ஸ் பந்துவீச்சாளர் அர்ஷ்தீப் சிங்கின் ஆற்றல் விஞ்சியதும், கடைசி ஓவரில் அவர் மேலும் 2 விக்கெட்களை வீழ்த்தியதும் பஞ்சாப் கிங்ஸின் வெற்றியில் மற்றொரு சிறந்த பங்களிப்பாக இருந்தது.
பஞ்சாப் கிங்ஸ் கடைசி 6 ஓவர்களில் 109 ஓட்டங்களை விளாசியது. ஆனால், மும்பை இண்டியன்ஸினால் 69 ஓட்டங்களையே பெறக்கூடியதாக இருந்தது.
முதலில் துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் 20 ஓவர்களில் 8 விக்கெட்களை இழந்து, 214 ஓட்டங்களைக் குவித்தது.
9.4 ஓவர்களில் 4 விக்கெட்களை இழந்து, 84 ஓட்டங்களை பெற்றிருந்த பஞ்சாப் கிங்ஸ் 14 ஓவர்கள் நிறைவில் மேலதிக விக்கெட் இழப்பின்றி 105 ஓட்டங்களை மாத்திரமே பெற்றிருந்தது.
ஆனால், ஹார்ப்ரீத் சிங் பாட்டியா, பதில் அணித் தலைவர் சாம் கரன், ஜிட்டேஷ் ஷர்மா ஆகியோரின் அதிரடிகளின் உதவியுடன் கடைசி 6 ஓவர்களில் 109 ஓட்டங்கள் குவிக்கப்பட பஞ்சாப் கிங்ஸின் மொத்த எண்ணிக்கை 214 ஓட்டங்களாக உயர்ந்தது.
ஹார்ப்ரீத் சிங் பாட்டியா 28 பந்துகளில் 41 ஓட்டங்களையும், சாம் கரன் 29 பந்துகளில் 55 ஓட்டங்களையும் பெற்றதுடன், 5ஆவது விக்கெட்டில் 48 பந்துகளில் 92 ஓட்டங்களை பகிர்ந்தனர்.
ஜிட்டேஷ் ஷர்மா 7 பந்துகளில் 4 சிக்ஸ்களுடன் 25 ஓட்டங்களை விளாசினார்.
பந்துவீச்சில் பியூஸ் சௌலா 15 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும், கெமரன் க்றீன் 41 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்களையும் வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய மும்பை இண்டியன்ஸ் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்களை இழந்து 201 ஓட்டங்களை மாத்திரமே பெற்றது.
இஷான் கிஷான் ஒரு ஓட்டத்துடன் ஆட்டம் இழந்தபோதிலும், ரோஹித் ஷர்மா, கெமரன் க்றீன், சூரியகுமார் யாதவ் ஆகியோரின் அதிரடிகளின் உதவியுடன் மும்பை இண்டியன்ஸ் 14 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்களை மாத்திரம் இழந்து, 132 ஓட்டங்களைப் பெற்று வலுவான நிலையில் இருந்தது.
ஆனால், கடைசி 6 ஓவர்களில் 69 ஓட்டங்களை மாத்திரமே மும்பை இண்டியன்ஸினால் பெற முடிந்தது.
ரோஹித் ஷர்மா 27 பந்துகளில் 44 ஓட்டங்களை பெற்றதுடன், கெமரன் க்றீனுடன் 2ஆவது விக்கெட்டில் 76 ஓட்டங்களை பகிர்ந்தார்.
தொடர்ந்து, கெமரன் க்றீனும், சூரியகுமார் யாதவ்வும் 3ஆவது விக்கெட்டில் 75 ஓட்டங்களை பகிர்ந்து அணியை பலமான நிலையில் இட்டனர்.
கெமரன் க்றீன் 43 பந்துகளில் 67 ஓட்டங்களைக் குவித்தார்.
சூரியகுமார் யாதவ் 26 பந்துகளில் 57 ஓட்டங்களை பெற்றிருந்தபோது மொத்த எண்ணிக்கை 17.3 ஓவர்களில் 182 ஓட்டங்களாக இருந்தது. ஆனால், அடுத்த பந்தில் சூரியகுமார் யாதவ்வின் விக்கெட்டை அர்ஷ்தீப் சிங் வீழ்த்தியதும் ஆட்டத்தில் திருப்புமுனை ஏற்பட்டது.
கடைசி ஓவரிலும் அர்ஷ்தீப் சிங் அடுத்தடுத்த பந்துகளில் திலக் வர்மா, நெஹால் வதீரா ஆகியோரின் விக்கெட்களை வீழ்த்தி பஞ்சாப் கிங்ஸின் வெற்றியை உறுதிசெய்தார்.
டிம் டேவிட் 13 பந்துகளில் 25 ஓட்டங்களுடன் ஆட்டம் இழக்காதிருந்தார்.
பந்துவீச்சில் அர்ஷ்தீப் சிங் 29 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்களை கைப்பற்றினார்.