“சீதா ராமம் படத்தின் வெற்றிக்கு பிறகு ஏராளமானவர்கள் கடிதத்தை எழுதி, அதனை புகைப்படமெடுத்து, எம்முடைய சமூக வலைத்தளப்பக்கத்தில் பதிவிடுகிறார்கள். இத்தகைய வரவேற்பு எம்மை மகிழ்ச்சியடையச் செய்திருக்கிறது” என ‘சீதா ராமம்’ பட நாயகன் துல்கர் சல்மான் தெரிவித்திருக்கிறார்.
வைஜெயந்தி மூவிஸ், ஸ்வப்னா சினிமா ஆகிய பட தயாரிப்பு நிறுவனங்கள் இணைந்து பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்த ‘சீதா ராமம்’ எனும் திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாகி, ரசிகர்களின் பாராட்டையும் வரவேற்பையும் பெற்றிருக்கிறது. இந்த திரைப்படம் வெளியான ஆறு நாட்களில் உலகளவில் நாற்பது கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்திருக்கிறது. இந்நிலையில் விமர்சன ரீதியாகவும், வசூல் செய்தியாகவும் ‘சீதா ராமம்’ பெரிய வெற்றியைப் பெற்றதால், சென்னையில் உள்ள நட்சத்திர ஹொட்டேலில் படக்குழுவினர் வெற்றி விழாவைக் கொண்டாடினர். இவ்விழாவில் இசையமைப்பாளர் விஷால் சந்திரசேகர், படத்தில் இயக்குநர் ஹனு ராகவபுடி, கதாநாயகன் துல்கர் சல்மான், படத்தை தமிழில் வெளியிட்ட லைகா நிறுவனத்தில் தமிழக தலைமை நிர்வாக அதிகாரி ஜி.கே. தமிழ் குமரன் உள்ளிட்டோர் பங்குபற்றினர்.
நடிகர் துல்கர் சல்மான் பேசுகையில், ” சீதா ராமம் படத்திற்கும் தமிழ் ரசிகர்கள் அளித்த ஆதரவு, வித்தியாசமான படைப்புகளுக்கு உங்களின் ஆதரவு உண்டு என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறீர்கள். ‘சீதா ராமம்’ என்ற படமே ஒரு கனவு போன்றது. இயக்குநர் ஹனு, கதையை சொல்லும் போது இது ஒரு காவிய காதல் கதை என்பது மட்டும் புரிந்தது. இதற்கு முன் கேட்காத காதல் கதையாகவும் இருந்தது. கதையை முழுவதும் கேட்டதும் அசலாக இருந்தது. ஏனெனில் இயக்குநர் இந்த கதையை அவரது மனதின் அடியாழத்திலிருந்து எழுதியிருந்தார். இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஒரு போர் போல் நடைபெற்றது. இயக்குநர் என்ன சொன்னாரோ.. அதனை ஒட்டுமொத்த பட குழுவினரும் மறுப்பே சொல்லாமல் பின்பற்றினோம். இந்தப் படத்தில் நான் நடித்திருக்கும் ராம் எனும் கதாபாத்திரம் என் வாழ்க்கையில் மறக்க இயலாத வேடம்.
இயக்குநரிடம் கதை கேட்கும் போது கூட கடிதம் எழுதும் பழக்கம் தற்போது பெரியளவில் இல்லை என்பதால் எப்படி வரவேற்பு கிடைக்கும் என்ற எண்ணமும் இருந்தது. ஆனால் இந்தப் படத்தை பார்த்துவிட்டு ஏராளமானவர்கள் மீண்டும் கடிதம் எழுத தொடங்கி இருக்கிறார்கள். ஏதேனும் ஒரு தாளில் கடிதம் எழுதி, அதனை புகைப்படமாக எடுத்து, என்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பதிவிடுகிறார்கள். இத்தகைய டிஜிட்டல் கடித வரவேற்பு மகிழ்ச்சியளிக்கிறது.” என்றார்.