இந்து சமூத்திரத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்தும் கடல்சார் இராஜதந்திர போர்க்களமாக இலங்கை மாறியுள்ளது. அமெரிக்கா , இந்தியா , பாகிஸ்தானை தொடர்ந்து சீனாவின் பாரிய போர் கப்பல் ஒன்று இவ்வாரத்தில் இலங்கைக்கு விஜயம் மேற்கொள்ள உள்ளது. இந்த போர் கப்பல் எதிர்வரும் வெள்ளிக்கிழமை இலங்கைக்கு வரவுள்ளதாக கடற்படை உறுதிப்படுத்தியது.
கடந்த இரண்டு வாரத்திலிருந்து இன்றுவரையில் இந்தோனேசியா, தென்கொரியா, பங்களாதேஸ், அமெரிக்கா , இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய நாடுகளின் போர்க்கப்பல்கள் கொழும்பில் நங்கூரமிட்டன. இன்று பாகிஸ்தானின் பி எஸ் என் செய்ப் சீனத் தயாரிப்பு போர்க்கப்பல் கொழும்புக்கு வரவுள்ளது.
பல முக்கிய நாடுகளின் போர் கப்பல்கள் இலங்கையை நோக்கி நகர்த்தப்படுகின்றமை இந்து சமுத்திரத்தின் மீதான ஆளுமையை வெளிப்படுத்துவே முயல்கின்றன. இது வரையில் இலங்கையை வந்தடைந்த அனைத்து கப்பல்களும் நல்லெண்ண விஜயத்தின் அடைப்படையிலேயே வருவதாக அந்த நாடுகள் குறிப்பிட்டுள்ளன. ஆனால் அந்த விஜயங்கள் இந்து சமுத்திரத்தின் கடல்சார் பன்னாட்டு இராஜதந்திர நகர்வுகளை வெளிப்படுத்துவதாகவே அமைகின்றது.
உலகின் ஏழு கடல்களுக்குமான சாவி இந்து சமுத்திரத்தில் காணப்படுகின்றது என பல தசாப்பதங்களுக்கு முன்னர் அமெரிக்க கடற்படை அதிகாரி ஒருவர் தெரிவித்திருந்தார். அன்று தொடக்கம் இன்று வரையில் இந்து சமுத்திரத்தில் அமெரிக்காவின் செல்வாக்கு உயர்ந்தே காணப்படுகின்றது. இதற்கு அமைவாகவே ஜப்பான் , அவுஸ்திரேலியா மற்றும் சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் அமெரிக்க பாதுகாப்பு தளங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
ஆனால் இந்தியாவில் இவ்வாறானதொரு பாரிய அமெரிக்க கடற்படை பாதுகாப்பு தளம் இல்லை. ஆனால் அமெரிக்க பாதுகாப்பு கட்டமைப்பிற்குள் இந்தியா சுயாதீன பங்காளியாகவே காணப்படுகின்றது. ஆனால் இந்து சமுத்திரத்தில் ஏற்பட கூடிய புதிய சவால்களை எதிர்கொள்வதற்கு இலங்கையின் ஒத்துழைப்புகள் இன்றியமையாதவையாகியுள்ளது.
இதனை மேலும் உறுதிப்படுத்தும் வகையில் சீன நகர்வுகள் அண்மைக்காலமாக தீவிரமடைந்துள்ளது. எனவே தான் அமெரிக்க போர்க்கப்பல்களின் பிரசன்னம் இந்து சமுத்திரத்திலும் இலங்கை கடலிலும் அதிகமாக காணப்படுகின்றது. கடந்த வாரம் அமெரிக்க நாசகாரி போர்க்கப்பல்கள் இலங்கையில் நங்கூரமிடப்பட்டிருந்தன. மேலும் இந்தியாவின் மூன்று போர்க்கப்பல்கள் தற்பேர்து கொழும்பு துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டுள்ளது.
இந்த இரண்டு நாடுகளின் போர் கப்பல்கள் இலங்கை விஜயத்தை நிறைவு செய்து திரும்புகின்ற நிலையில் பாகிஸ்தான் மற்றும் சீன கப்பல்கள் இலங்கைக்கு வர உள்ளன. இந்த விஜயங்கள் அனைத்துமே தமது ஆளுமையை வெளிப்படுத்தும் வகையிலேயே காணப்படுகின்றது. இம்முறை இலங்கை வரும் சீன கப்பல் கொழும்பினை தொடர்ந்து ஹம்பாந்தொட்டைக்கும் விஜயம் செய்ய உள்ளது. ஹம்பாந்தொட்டை துறைமுகத்தில் சீன திட்டங்கள் முன்னெடுக்கப்படுகின்ற நிலையில் அந்த திட்டங்களுக்கு உச்சாகமளிக்கும் வகையில் சீன போர் கப்பல் ஹம்பாந்தொட்டைக்கு செல்லும் என எதிர்பார்க்கப்படுகின்றது.