அமெரிக்காவின் ஜோர்ஜியா மாநிலத்திற்கு அருகே உள்ள கடல்பகுதியில் சுமார் 4,000 கார்களுடன் கவிழ்ந்து விபத்துக்குள்ளான ‘கோல்டன் ரே’ கப்பலினுள் சிக்கியிருந்த 4 தென்கொரியர்களும் மீட்கப்பட்டுள்ளனர்.
சரக்குக் கப்பலில் துளையை ஏற்படுத்தி அவர்கள் வெளியே கொண்டுவரப்பட்டதாக அமெரிக்கக் கடலோரக் காவல்படை அதிகாரிகள் இன்று (திங்கட்கிழமை) தெரிவித்தனர்.
கடந்த ஞாயிற்றுக்கிழமை குறித்த கப்பல் தென்கொரியாவிலிருந்து மத்திய கிழக்கு நாடுகளுக்கு வாகனங்களை ஏற்றிச் சென்ற நிலையில், நிலைதடுமாறி விபத்துக்குள்ளானது.
சம்பவ தினத்தன்று 20 ஊழியர்கள் பாதுகாப்பாக மீட்கப்பட்டதை தொடர்ந்து 4 பேர் இயந்திர அறையில் சிக்கிக் கொண்டனர்.
அவர்களை மீட்பதற்கான பணிகள் மும்முரமாக இடம்பெற்று வந்த நிலையில் ஒவ்வொருவராக உலங்கு வானூர்தியின் உதவியுடன் மீட்கப்பட்டனர்.
கப்பல் விபத்தை எதிர்கொண்ட போது தீ ஏற்பட்டதால், இரவு நேரங்களில் மீட்புப் பணிகள் பாதுகாப்புக் காரணங்களுக்காக நிறுத்திவைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.