கடன் பெறும் எல்லையை அதிகரிப்பதற்காக 2020 ஆம் ஆண்டின் 07 ஆம் இலக்க, ஒதுக்கீட்டுச் சட்டத்திற்கான திருத்தம் பாராளுமன்ற உறுப்பினர் அநுரபிரிய தர்ஷன யாப்பா தலைமையில் கூடிய அரசாங்க நிதி பற்றிய குழுவில் முன்வைக்கப்பட்டு அனுமதிக்கப்பட்டது.
அதன்மூலம் 2ஆம் பிரிவு திருத்தம் செய்யப்படவிருப்பதுடன் இதனூடாக 2,997 பில்லியன் ரூபா என்ற கடன்பெறும் எல்லை, 3397 பில்லியன் ரூபாவாக அதிகரிப்பதாக அரசாங்க நிதி பற்றிய குழுக் கூட்டத்தில் வெளிப்பட்டது.
இது தொடர்பில் விளக்கமளித்த நிதி அமைச்சு மற்றும் திறைசேரியின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல குறிப்பிடுகையில்,
கொவிட் -19 தொற்றுநோயினால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார பின்புலம் காரணமாக 2021 ஆம் ஆண்டில் எதிர்பார்த்த வருமானத்தை ஈட்ட முடியாமல் போனமை, குறைநிரப்பு செலவீனம் அதிகரித்தமை, நாணயப் பெறுமதி வீழ்ச்சியால் வெளிநாட்டு நாணயப் பெறுமதியில் கடன்களை மீளச் செலுத்தும்போது ஏற்பட்ட பாதிப்பு போன்றவற்றின் காரணமாகவே ஒதுக்கீட்டுச் சட்டத்தில் திருத்தத்தைக் கொண்டுவந்து கடன் எல்லையை அதிகரிக்க வேண்டி ஏற்பட்டது என்றார்.
அத்துடன், கொவிட்-19 தொற்றுநோய் சூழல் காரணமாக நலன்புரிச் செலவுகள் அதிகரித்தமை காரணமாக குறைநிரப்பு செலவீனம் அதிகரித்திருப்பதாகச் சுட்டிக்காட்டிய அவர், இந்தச் செலவீனங்களுக்காக பாராளுமன்றத்தினால் கடந்த காலத்தில் 200 பில்லியன் ரூபா அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் தெரிவித்தார்.
இந்தத் திருத்தத்துக்கு மேலதிகமாக 2021.09.27ஆம் திகதி எடுக்கப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கு அமைய 1969ஆம் ஆண்டின் 01ஆம் இலக்க இறக்குமதி மற்றும் ஏற்றுமதி (கட்டுப்பாட்டுச்) சட்டத்தின் கீழ் 2020 ஆம் ஆண்டு ஒக்டோபர் 29 ஆம் திகதி முதல் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்ட வெள்ளைச் சீனிக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் முறையை நீக்குவது தொடர்பான நிதி அமைச்சரினால் வெளியிடப்பட்ட வர்த்தமானி அறிவித்தலுக்கும் இக்கூட்டத்தில் அனுமதி வழங்கப்பட்டது.
சீனி தொடர்பில் நாட்டில் ஏற்பட்டுள்ள நெருக்கடி நிலைமையைத் தெளிவுபடுத்த தடயவியல் அறிக்கை அவசியம் என பல தடவைகள் இக்குழு முன்னிலையில் தான் வலியுறுத்தியதாக கலாநிதி ஹர்ஷ.டி சில்வா சுட்டிக்காட்டினார்.
விரைவில் அரசாங்கக் கணக்குகள் பற்றிய குழுவினால் இது முன்வைக்கப்பட்ட பின்னர், இவ்விடயம் தொடர்பில் நீண்ட கலந்துரையாடல்களை மேற்கொள்ள முடியும் என அரசாங்க நிதி பற்றிய குழுவின் தலைவர் பதிலளித்தார்.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]