தற்போதைய மழையுடனான வானிலை காரணமாக இம் மாதத்தின் கடந்த 10 நாட்களில் 900 டெங்கு நோயாளர்கள் இனங்காணப்பட்டுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவு தெரிவித்துள்ளது.
டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கையில் கணிசமான அளவு குறைவடைந்துள்ள போதிலும், தற்போதைய மழையுடன் கூடிய வானிலை காரணமாக நுளம்புகளின் பெருக்கம் அதிகரித்துள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவின் பணிப்பாளர் வைத்தியர் நளின் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார் .
அவர் மேலும் தெரிவிக்கையில்,
கடந்த மாதம், சுமார் 5,000 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டனர். இந்த மாதத்தின் 10 நாட்களில், கிட்டத்தட்ட 900 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
குறிப்பாக, மேல் மாகாணத்தில் மாத்திரம் 50 வீதமான டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
இருப்பினும், கடந்த மாதத்தையும் இந்த மாதத்தையும் ஒப்பிடுகையில், மாதந்தோறும் கிடைக்கப்பெறும் தரவுகளின்படி டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை கணிசமாக குறைவடைவதை நாம் அவதானித்துள்ளோம்.
எவ்வாறாயினும், தற்போதைய தரவின் படி , நாடளாவிய ரீதியில் மழை பெய்து வருவதால் நுளம்புகள் பெருகும் அபாயம் உள்ளது என அவர் மேலும் தெரிவித்தார்.