கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கும் அமைச்சரவை பத்திரம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து அமைச்சரவை பத்திரத்துக்கு அனுமதி கிடைக்கும் என எதிர்பார்க்கிறோம் என்று சுதேச மருத்துவ இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி தெரிவித்தார்.
கொழும்பில் புதன்கிழமை (ஒக் 26) இடம்பெற்ற நிகழ்வில் கலந்துகொண்டதன் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
இதன்போது அவர் மேலும் கூறியதாவது,
வெளிநாட்டு கையிருப்பு பற்றாக்குறையால் சுதேச மருத்துவத்துறைக்கு தேவையான ஆயுர்வேத மருத்துவத்துறைக்கு தேவையான மருந்துப் பொருட்களை இறக்குமதி செய்வதில் தற்போது பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
மருந்து தட்டுப்பாடு ஆங்கில மருத்துவத்துறையிலும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது.
டொலர் நெருக்கடிக்கு தீர்வு காணும் வகையில் கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்க வேண்டும் என்ற யோசனை முன்வைக்கப்பட்டது. இதற்கு பலர் ஆதரவாகவும் எதிராகவும் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
கஞ்சா பயிர்ச்செய்கை தொடர்பில் ஐக்கிய மக்கள் சக்தியின் பெரும்பாலான உறுப்பினர்கள் சாதகமான நிலைப்பாட்டில் கருத்து தெரிவித்துள்ளார்கள்.
கஞ்சா பயிர்ச்செய்கையை சட்டபூர்வமாக்கும் பத்திரம் அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளப்பட்டதை தொடர்ந்து இன்னும் ஓரிரு வாரங்களில் அமைச்சரவை அங்கீகாரம் கிடைக்கப் பெறும் என எதிர்பார்க்கிறோம். மருத்துவ பயன்பாட்டுக்கு மாத்திரமே கஞ்சா பயன்படுத்தப்படும் என்றார்.