வன்னியில் போர் உச்சமாக இருந்த காலத்தில் லண்டனில் ஜிம்முக்குப் போய்க் கொண்டிருந்தவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம். அதை அவரே என்னிடம் நாடாளுமன்றத்தில் வைத்துத் தெரிவித்திருந்தார். அதனை அவரால் மறுக்க முடியுமா? என்று கேள்வி எழுப்பியுள்ளார் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினரும், ரெலோ அமைப்பின் செயலருமான ந.சிறீகாந்தா.
இலங்கைத் தமிழ் அரசுக் கட்சியின் வீட்டுச் சின்னத்தில் போட்டியிடும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பரப்புரைக் கூட்டம் பாசையூரில் நேற்றுமுன்தினம் இடம்பெற்றது. அதிலேயே அவர் இவ்வாறு கூறினார். அவர் தெரிவித்ததாவது- ,
தம்பி கஜேந்திரகுமாரும் அவருடன் சேர்ந்து நிற்கின்ற சில சின்னச் சட்டத்தரணிகளுமாக இங்கே தமிழ்த் தேசிய கூட்டமைப்புக்கு மாற்றாக ஒரு தலைமை வேண்டும் என்று கோசத்துடன் களமிறங்கியுள்ளார்கள். மாற்றுத் தலைமையைக் கோருகின்ற இவர்களுடைய, தலைமையின் தகமை என்ன என்பதை நான் உங்களுக்கு சொல்லவேண்டும்.
நாடாளுமன்ற உறுப்பினர் ரவிராஜ் சுட்டுக் கொல்லப்பட்டதை அடுத்து நாடாளுமன்ற உறுப்பினராக நான் நியமிக்கப்பட்டேன். 2006ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 30ஆம் திகதி நாடாளுமன்ற உறுப்பினரானேன். அப்போது போர் உக்கிரமடைந்திருந்தது. நாங்கள் எந்த நேரத்திலும் கொல்லப்படலாம் என்கின்ற நிலமையிலே இருந்தோம்.
கஜேந்திரகுமார் பொன்னம்பலம் அந்தக் காலகட்டத்தில் இலங்கையில் இருந்ததை விட வெளிநாடுகளில் குறிப்பாக லண்டனில் கூடுதலான காலம் இருந்தார். அவர் எப்போதாவதுதான் நாடாளுமன்றத்துக்கு வருவார். தயாரிக்கப்பட்ட ஆங்கில உரையோடு வருவார். வாசிப்பார். இரண்டு நாள்கள் கொழும்பில் நிற்பார். பின்னர் லண்டனுக்கு திரும்பிச் சென்றுவிடுவார்.
உயிர் ஆபத்து இருந்த காரணத்தால் நாங்கள் மெய்ப் பாதுகாவலர்களை ஏற்றுக் கொள்ளவேண்டிய தேவை இருந்தது. தனக்குப் பாதுகாப்புத் தேவையில்லை என்று படம் காட்டிக் கொண்டிருந்தார் கஜேந்திரகுமார்.
போர் நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் லண்டனிலிருந்து நாடாளுமன்றத்துக்கு வந்தார். கொஞ்சம் மெலிந்து காணப்பட்டார். அண்ணன் குமார் பொன்னம்பலத்தின் மகனாச்சே. எனது மகனின் வயதைக் கொண்ட சின்னவன் அல்லவா?. இந்த அடிப்படையில் அவரை அன்போது நான் கேட்டேன். தம்பி ஏன் மெலிந்து இருக்கின்றீர்கள். ஏதாவது சுகவீனமா? என்று கேட்டேன்.
அவர் பதில் சொன்னார். அந்தப் பதில் எனக்குத் தூக்கி வாரிப் போட்டது. அதிர்ச்சியாக இருந்தது. ‘இல்லை, நான் லண்டனில் இருந்தபோது ஜிம்முக்கு போயிருந்தேன்’ என்று சொன்னார். வன்னிப் பிராந்தியத்தில் மக்கள் கொத்துக் கொத்தாக கொல்லப்பட்டுக் கொண்டிருந்தார்கள். எங்கள் இளம் சிட்டுக்கள் களத்தில் பலியாகிக் கொண்டிருந்தார்கள். மக்கள் கொல்லப்பட்டபோது லண்டனில் ஜிம்முக்கு போனதுதான் தலைமைக்கான அறிகுறியா ? – என்று கேள்வி எழுப்பினார்.