ரஷ்யாவின் கலினிங்க்ராட் உயிரியல் பூங்காவில், பெண் ஊழியர் ஒருவர் சைபீரிய புலிக்கு உணவளிக்கச் சென்றார். அப்போது பார்வையாளர்கள் மேலிருந்து பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆண் புலி இருக்கும் கூண்டின் கதவு தவறுதலாகத் திறந்திருந்ததை அந்தப் பெண் கவனிக்கவில்லை. திடீரென்று அந்தப் பெண்ணின் மீது பாய்ந்தது புலி. பயத்தில் கத்தினார்.
மேலே இருந்த பார்வையாளர்கள் அதிர்ச்சியடைந்தனர். சிலர் கற்களை எடுத்து புலி மீது வீசினர். ஆனாலும் அந்தப் பெண்ணை விடுவதாக இல்லை புலி. அருகிலிருந்த உணவகத்திலிருந்து நாற்காலிகளை எடுத்துவந்து வீசினார்கள். புலியின் கவனம் திசை திரும்பியது. அந்த நேரத்தைப் பயன்படுத்திக்கொண்டு, வேகமாக வெளியேறினார் அந்தப் பெண்.
சக பூங்கா ஊழியர்கள் இந்தச் சம்பவத்தின்போது அருகில் இல்லை. பார்வையாளர்களே ஆம்புலன்ஸை வரவழைத்து, அந்தப் பெண்ணை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். “இது மோசமான சம்பவம். இந்தப் பூங்கா ஆரம்பித்து இத்தனை ஆண்டுகளில் இதுபோன்ற ஒரு சம்பவம் நடைபெற்றதே இல்லை. யாரோ புலியின் கூண்டைத் திறந்து, பூட்ட மறந்துவிட்டனர்.
அந்தப் பெண் மிக மோசமாகப் புலியால் பாதிக்கப்பட்டிருக்கிறார். ஆனால் உயிருக்கு ஆபத்து இல்லை. குணம் பெற நீண்ட காலம் ஆகும். சம்பவம் குறித்து விசாரணை நடைபெற்று வருகிறது. இந்தப் புலிக்கு 16 வயதாகிவிட்டது. அன்று நல்ல மனநிலையில் புலி இல்லை என்று தெரியவந்திருக்கிறது” என்கிறார் பூங்காவின் செய்தித் தொடர்பாளர்