சைட்டம் தனியார் மருத்துவ கல்லூரியை தடைசெய்தல் உள்ளிட்ட கோரிக்கைகள் பலவற்றை முன்வைத்து சைட்டம் எதிர்ப்பு மக்கள் எழுச்சிஇயக்கம், ஓகஸ்ட்மாதம் 2ஆம் திகதியை தேசிய எதிர்ப்பு தினமாக நேற்று அறிவித்துள்ளது.
கொழும்பு விகாரமகா தேவி பூங்காவில் இடம்பெற்ற தேசிய பொதுச் சபை கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டது.
அந்த கூட்டத்தில் பல்கலைக்கழக மாணவர்கள், அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம், தொழிற் சங்கங்கள், அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகள் மற்றும் பொது அமைப்புகளின் பிரதிநிதிகள் ஆகியோர் பங்குகொண்டனர்.
இதேவேளை, அரசாங்கம் கல்வி மற்றும் சுகாதார சேவையை தனியார் மயப்படுத்தும் கொள்கை நிலைப்பாட்டில் இருப்பதாக அகில இலங்கை மருத்துவ அதிகாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது.
இதற்கிடையில், அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் முன்னெடுத்த பணிப் புறக்கணிப்பு போராட்டம் நேற்று பிற்பகல் 4 மணியுடன் நிறைவுக்கு கொண்டுவரப்பட்டது.
மருத்துபீட மாணவ செயற்பாட்டாளர் ரயன் ஜயலத்தை கைதுசெய்ய முயற்சிப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் நேற்று காலை 8 மணிமுதல் குறித்த அடையாள பணிப் புறக்கணிப்பு போராட்டத்தை நடத்தினர்.
எனினும், அமைச்சர் சாகல ரத்நாயக்கவுடன் அலரி மாளிகையில் இடம்பெற்ற பேச்சுவார்த்தையை அடுத்து, போராட்டத்தை விலக்கிக் கொள்ள தீர்மானித்துள்ளதாக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர் தெரிவித்தனர்.
அத்துடன், சைட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தும் பல்கலைக்கழக மாணவர்கள் கைது செய்யப்பட்டுவதற்கும் எதிர்ப்பு தெரிவித்து லிப்டன் சுற்றுவட்டத்தில் மாணவர்கள் தொடர்ந்தும் தங்கியுள்ளனர்.
அவர்கள் தங்கியுள்ள இடத்திற்கு நேற்றைய தினம் இலங்கை மருத்துவ சபையின் முன்னாள் தலைவர் காலோ பொன்சேகா சென்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.