நோர்வே – ஒஸ்லோ மாநகர பிரதி மேயர் கம்சாயினி குணரட்ணத்துடனான நேற்றைய சந்திந்திப்பு பற்றி உங்களோடு சிறு பகிர்வு .
– சிறு பிள்ளை வேளாண்மை விளைந்தும் வீடு வந்து சேராது என்பார்கள் –
ஈழத்து பெண்கள் மாறுகரை சேலையும்,மல்லிகைப்பூவும் ,குடங்களில் காவும் தண்ணீரும், குழாயடியில் நடக்கும் பேச்சுமாகவே எப்போதும் இருப்பார்கள் என்ற எண்ணத்தோடுதான் வெளிநாடுகளில் போய்வாழும் எமது உறவுகள் இருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது ஆழ்ந்த வேதனையும் அடங்காக் கோபமும் வருகிறது .
நாங்கள் வாழும் சூழல் வேறாக இருக்கலாம் நமது இலட்சியம் வேறாக இருக்கலாம் ஆனால் நாம் உலகை படிக்காதவர்கள் இல்லையே – வெளிநாடுகளில் இருக்கும் எம் தமிழின அரசியல் பிரபலங்களையும், அவர்களின் வாழ்வியலையும் , நாம் அறியாதவர்கள் இல்லையே – எமது ஊர்களில் நடக்கும் சின்னச்சின்ன பிரச்சனைகள் எப்படி உங்களுக்கு தெரியாமல் இருக்கிறதோ அப்படித்தான் நீங்கள் வாழும் நாடுகளில் நடக்கும் சின்னச்சின்ன வாழ்வியல், சமூக விடயங்கள் எமக்கு தெரியாமல் இருக்கிறதே அன்றி மற்றயபடி நீங்கள் வாழும் நாடுகளில் நடக்கும் அத்தனை சங்கதிகளையும் நாம் அத்துப்படியாக தெரிந்து வைத்திருக்கிறோம்.
உங்களால்மட்டும் ஏன் உங்கள் சொந்தநாட்டு பெண்களின் வாழ்வியலை, அவர்கள் இருக்கும் சூலை, அவர்களுக்கு என்ன வேண்டும், அவர்களால் என்ன ஆகவேண்டும்,அவர்களுக்கு அரசியல் பற்றியும் சமூக முன்னேற்றம் பற்றியும், நாம் என்ன கூறவேண்டும் என்ற விடயங்களையும் தெரிந்துகொள்ள முடியாமல் போய்விட்டது ?
போருக்குப் பின்னரான ஈழத்துபெண்களின் வாழ்வியல் ,அவர்கள் அரசியலில் அடைந்துள்ள முன்னேற்றம், அதற்க்கு நாம் என்ன ஆலோசனைகளை வழங்கவேண்டும் என்ற எண்ணம், யோசனை இல்லாது வெறுமனே கருக்கலைப்பு குழந்தை வளர்ப்பு ,இளையவர் பலம் இவை பற்றிப்பேச இலங்கையில் ஆட்கள் இல்லையா ?
வெளி நாடு ஒன்றில் அரசியல் செய்யும் ஈழத்துப் பெண்ணிடம் அரசியல் ,சட்டம் ,பெண்கள் மீது திணிக்கப்படும் வன்முறைகளுக்கு நோர்வேநாட்டு அரசியலில் கிடைக்கும் எதிர்ப்பு, அவர்கள் அந்தவிடயத்தை எவ்வாறு கையாளுகிறார்கள்? சட்டங்களில் அவற்றை எவ்வாறு பேணுகிறார்கள் ?பெண்களின் வளர்ச்சிக்கும் உயர்ச்சிக்கும் அந்த நாட்டு அரசு எப்படி ஒத்துளைக்கிறது ?எமது நாட்டில் என்ன வழிகளில் அவை எம் பெண்களுக்கு கிடைக்காமல் ஒடுக்கப்படுகின்றோம் என்பதுபற்றிய ஆலோசனைகளுக்காக போய் அமர்ந்திருந்த எனக்கு வெறுப்பையும் ,சினத்தையும் ஏற்ப்படுத்தினார் கம்சாயினி குணரட்ணம் .
எமது நாட்டுப் பெண்கள் எத்தனை வெற்றிகளை பெறவில்லையா ? அவற்றை எப்படி அடைந்தார்கள் என்பதுபற்றி அறியாது எமது உடல்பற்றியும், பாலியல் பற்றியும், கருக்கலைப்பு பற்றியும் பேசவேண்டிய காலமல்ல இது – அவற்றை திடமாக்கா அவற்றில் இருந்து விடுபட நாம் வைத்திருக்கும் இலக்கு வேறு – அந்த இலக்கை அடைய வேற்று நாடுகளில் முதன்மை நிலையில் கணிக்கப்படும் நீங்கள் எமக்கு ஆலோசனை வழங்குவீர்கள் என எதிர்பார்த்தோம். ஆனால் எங்கள் பற்களை குத்தி நாமே மணந்த கதையாக அமைந்த சந்திப்பு வேதனை தருகிறது.
கம்சாயினி பேசவேண்டிய விடயம் வேறாக எதிர்பார்த்தோம் ஆனால் அவர் எம்மைப்பற்றி கணித்து வைத்திருந்து பேசிய விடயங்கள் வேறாக இருந்துவிட்டமை வேதனை தருகிறது.
நமது ஈழத்துப்பெண்கள் வளர்ச்சி அடையவில்லை அறிவுரீதியாக அவர்களுக்கு ஆலோசனைகள் வேண்டும் என்று யாரும் நினைக்கவேண்டாம். அவர்கள் வளர்ச்சியின் முதல்படியில் நிற்கிறார்கள் எனவே அவர்களுக்கு ,சட்டம் ,சட்டம் மீறிய அரசியல் அரசியல் சார்ந்த உரிமை இவைகள் பற்றி தெளிவுபடுத்தல்ககளே தேவை. அதுவும் மற்றைய நாட்டின் அரசியல் விழுமியங்களை அறிந்தவர்களால் அவை சொல்லப்படும்போது நாம் வரவேற்கிறோம் – வெறுமனே பழையகாலத்து பல்லவிகளை பாடவேண்டிய தேவை இப்போது நமக்கு இல்லை .
மேலோட்டமாக பார்க்கப்பட்ட விடயங்களை ஆழமாக உள்வாங்கி அந்த நினைப்பிலேயே எல்லோரையும் பார்க்க முற்படவேண்டாம் .
சிறு பிள்ளை வேளாண்மை விளைந்தும் வீடு வந்து சேராது என்பார்கள் -விளைந்திருக்கிறது ஆனால் ….
– ப்ரியமதா பயஸ் –
(தொலைபேசிகளை இயக்கமற்ற நிலைக்கு கொண்டுசெல்லுங்கள் ,யாரும் பேசாதீர்கள் ,மற்றவர்களோடு பேசுபவர்களை வெளியே துரத்தி விடுவேன் என்ற கோரிக்கைகளோடு கூட்டத்தை ஆரம்பித்தார் கம்சாயினி – அவர் கலந்துரையாட அழைக்கப்பட்ட பெண்கள் – சமூகத்தில், அரசியலில் ,வாழ்க்கையில் முன்னணியில் இருப்பவர்கள் .கலந்துரையாடலுக்கு போனவர்களை பேசினால் துரத்தி விடுவேன் என்ற அணுகுமுறையான ஆரம்பமே – வெறுப்பை ஏற்ப்படுத்தியத்தை மனவேதனையுடன் பகிர்கிறேன் )இவ்வாறு அவர்தனது பிரத்தியேக முகநூல் பக்கத்தில் கருத்துரைத்துள்ளார்.