அக்லாக் படுகொலை கொலைகாரர்களுக்கு அரசு வேலை வழங்கியுள்ள உ.பி அரசுக்கு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் கண்டனம் தெரிவித்துள்ளது. இதுதொடர்பாக TNTJ பொதுச்செயலாளர் சையது இப்ராஹிம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,
எப்படிப்பட்ட நாட்டில் நாம் வாழ்கிறோம் என்ற கேள்வியை மறுபடியும் ஒவ்வொரு இந்தியனும் தனக்குத் தானே கேட்டுக் கொள்ளும் படு கேவலமான செயல் உத்தரப் பிரதேச மாநிலத்தில் மீண்டும் மீண்டும் அரங்கேறி வருகிறது.
கடந்த 2015 ஆம் ஆண்டு செப்டம்பரில் அங்குள்ள தாத்ரி என்ற பகுதியில் பசு இறைச்சி வைத்திருந்தார் என்று அபாண்டமாகக் குற்றம் சாட்டி, அடித்தே கொல்லப்பட்டிருந்தார் முஸ்லிம் முதியவர் முகம்மது அக்லக். அவரது குடும்பத்தினரும் கடும் தாக்குதலுக்கு உள்ளாகினர். உண்மையில் அவரது வீட்டில் இருந்தது பசு இறைச்சியே அல்ல என்பது பின்னர் தெரிந்தது.
நாடே அதிர்ச்சியில் ஆழ்ந்த இந்த சம்பவத்தின் தொடர்ச்சியாக, அப்போதைய உ.பி. அரசு கொலை செய்தவர்கள் மீது வழக்குப் போட்டு கைது செய்தது. ஆனால் உள்ளூர் பாஜக பிரமுகர்களின் செல்வாக்கால் குறுகிய கால அவகாசத்திலேயே ஜாமினில் வெளியே வரவைக்கப்பட்டனர் அந்த வெறியர்கள்.
இப்போதோ, ஒருபடி மேலே போய் அவர்களுக்கு மத்திய அரசு நிறுவனம் ஒன்றில் வேலை வாங்கிக் கொடுத்திருக்கின்றனர் பாஜக எம்.ஏல்.ஏக்கள் சிலர்.
உலகில் இதுவரை எங்குமே நடக்காத ஈனச் செயல் நடந்திருப்பது கண்டு இரத்தம் கொதித்துப்போயிருக்கின்றனர் இந்திய மக்கள்.
இத்தோடு நிறுத்திக் கொள்வார்களா இல்லை இதற்கு மேலேயும் போவார்களா என்ற கேள்விதான் இப்போது நாடு முழுக்க எதிரொலிக்கிறது. அபாண்டமாக குற்றம் சாட்டி ஒருவரை கொலையும் செய்துவிட்டு, அந்தக் கொலைக்குப் பரிசாக அரசு வேலையும் கிடைக்கிறது என்றால் ஒவ்வொரு பாஜக காரனும் இதிலிருந்து என்ன புரிந்து கொள்வான் என்பதை மக்கள் சிந்தனைக்கே விட்டுவிடுகிறோம்.
பாஜகவினர் இதன் மூலம் என்ன சொல்ல வருகின்றார்கள் என்பதும் அனைவருக்கும் புரிந்திருக்கும்.
இதன் மூலம் என்ன சொல்ல வருகிறார்கள் இந்தக் கயவர்கள் என்பதை நடுநிலை இந்துக்களாவது புரிந்து கொண்டு, அவர்களைப் புறக்கணிக்கவும் அவர்களது இந்தச் செயலைக் கண்டிக்கவும் முன் வந்தால், இந்த நாட்டில் கொஞ்சமாவது மனிதாபிமானம் உள்ளது என்பதை நாம் நம்பலாம்.
சிஸ்ட்டம் கெட்டுவிட்டது, நாடு சரியில்லை என்று கூறிவந்த நடிகர் கூட்டத்தில் யாராவது ஒருவர் இந்த ஈனச் செயல் பற்றி வாய் திறப்பாரா? இல்லை; வாய்திறக்கவே மாட்டார்கள்.
ஏன் என்றால் அந்த கொலைவெறியர்களை தமிழகத்தில் எப்படியாவது காலூன்றச் செய்யவேண்டும் என்ற திட்டத்தின்படிதான் அவர்கள் செயல்படுகிறார்கள்.
இந்த படுபாதகச் செயலை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மிகவும் வன்மையாகக் கண்டிக்கிறது. நடுநிலை என்று சொல்லிக் கொள்ளும் அரசியல் கட்சிகளும் இந்தச் செயலுக்கு தங்களது கண்டனங்களைப் பதிவு செய்யவேண்டும் என்று நாம் விரும்புகிறோம். பொறுத்திருந்து பார்க்கலாம்.
மேற்கண்டவாறு சையது இப்ராஹிம் அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.