எம்மில் சிலருக்கு அரிதாக மரபணு குறைபாட்டின் காரணமாகவும், வேறு சிலருக்கு காதில் உள்ள ஒலி நரம்பு மண்டலத்தில் ஏற்படும் பாதிப்பின் காரணமாகவும், கேட்கும் திறனில் பாதிப்பு ஏற்படும். இதற்கு தற்போது ஸ்டீரியோடாக்டிக் ரேடியோசர்ஜேரி எனும் கதிரியக்க சிகிச்சை பலனளித்து வருவதாக மருத்துவர் நிபுணர்கள் தெரிவித்திருக்கிறார்கள்.
எம்மில் சிலருக்கு கேட்கும் திறனின் பாதிப்பு ஏற்பட்டாலோ… காதில் எப்போதும் ரீங்காரமிடும் ஒலி கேட்பது போன்ற உணர்வு இருந்தாலோ அல்லது நிற்கும்போதோ… நடக்கும் போதோ… சமநிலை தவறி தடுமாறினாலோ அல்லது முகத்தில் உள்ள தசைகளின் இயக்கத்தில் ஏதேனும் குறைபாடுகள் ஏற்பட்டாலோ உங்களுடைய இரண்டு காதுகளில் ஏதோ ஒரு காதில் உள்ள ஒலி நரம்பு மண்டலத்தில் பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது.
இதற்கு மருத்துவ மொழியில் வெஸ்டிபுலர் ஸ்க்வான்நோமா என்றும், அக்வாஸ்டிக் நியுரோமா என்றும் குறிப்பிடுவார்கள். இது காது பகுதியிலிருந்து மூளைக்கு செல்லும் நரம்பு மண்டல பகுதியில் புற்றுநோய் அல்லாத கட்டிகள் உருவாகி இருக்கிறது என்று பொருள்.
மூளைக்கு செல்லும் இந்த ஒலி நரம்புகளின் கிளைகளில் அழுத்தம் ஏற்பட்டால்… காது கேளாமை பாதிப்பு ஏற்படும். வேறு சிலருக்கு காதில் வித்தியாசமான ஒலி கேட்டுக் கொண்டேயிருக்கும். நிற்பதற்கும், நடப்பதற்கும் சமநிலை தவறி.., நிலையற்ற தன்மையையும் உண்டாக்கும்.
பெரும்பாலானவர்களுக்கு இந்த பாதிப்பு அதாவது நரம்பு மண்டலத்தில் உண்டாகும் கட்டி மெதுவான வளர்ச்சியையே பெறும். வெகு சிலருக்கு மட்டுமே இவை வேகமாக வளர்ச்சி அடைந்து, மூளை பகுதிக்கு அழுத்தத்தை உண்டாக்கி, மூளையின் செயல்பாட்டில் குறுக்கீடு செய்து பாரிய அச்சுறுத்தலை ஏற்படுத்தும்.
இத்தகைய பாதிப்புடன் இருப்பவர்களுக்கு மருத்துவர்கள் ஓடியோமெட்ரி எனப்படும் வழக்கமான பரிசோதனையுடன், எம்ஆர்ஐ ஸ்கேன் பரிசோதனை மேற்கொண்டு பாதிப்பின் தன்மையை உறுதிப்படுத்துவார்கள்.
அதன் பிறகு காதின் உட்பகுதியில் உண்டாகி இருக்கும் கட்டியின் அளவைப் பொறுத்து சிகிச்சையை மேற்கொள்வார்கள். கட்டி 2.5 மில்லி மீற்றர் அளவிற்கு இருந்தால்.., அதனை சத்திர சிகிச்சையின் மூலமாகவோ அல்லது ரேடியேசன் தெரபி எனப்படும் கதிரியக்க சிகிச்சை மூலமாகவோ சிகிச்சை அளித்து முதன்மையான முழுமையான நிவாரணத்தை வழங்குவார்கள்.
சிலருக்கு அவர்களின் உடலில் உள்ள இணை நோய்களின் காரணமாக இத்தகைய பாதிப்பு ஏற்பட்டிருந்தால் அவர்களுக்கு ஸ்டீரியோடாக்டிக் ரேடியோசர்ஜேரி எனும் கதிரியக்க சிகிச்சையை மேற்கொண்டு முழுமையான நிவாரணத்தை வழங்குவர். வேறு சிலருக்கு புரோட்டான் பீம் தெரபி எனும் நவீன சிகிச்சையையும் வழங்கி நிவாரணத்தை அளிப்பர்.
டொக்டர் வேணுகோபால்
தொகுப்பு அனுஷா.